ஒரு நடிகனாக தனக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை ரசிகர்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


கமல்ஹாசன்


உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதே நேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார். நடிகர் , இயக்குநர், பாடகர் , பாடலாசிரியர் , நடன கலைஞர், ஸ்டண்ட் மாஸ்டர் என பல பரிமானங்களில் சினிமாவில் கிட்டதட்ட 65 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார் கமல்ஹாசன். இந்திய திரையுலகிலேயே  இளம் தலைமுறையினர் பார்த்து கற்றுக் கொள்வதற்கு அவரது படங்களும் தெரிந்துகொள்வதற்கு அவருடைய அனுபவங்களும் கொட்டிக் கிடக்கின்றன. 


கமல்ஹாசனிடம் தனித்துவமான குணாம்சம்






கமலை பாராட்டி பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதில் குறிப்பிட்டு சொல்லும்படி ஒரு அம்சம் இருக்கிறது. இளம் தலைமுறையைச் சேர்ந்தவர் முதல் மூத்த திரைக்கலைஞர்கள் வரை கமலை இன்று பாராட்டி பேசுகிறார்கள். அவரிடம் பேசும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கூட ஏதோ ஒரு படத்தின் காட்சியை குறிப்பிட்டு அதை அவர் எப்படி செய்தார் என்று கேட்கிறார்கள். சிலர் கிட்டதட்ட அவரை ஒரு கடவுளாகவே பிரம்மித்து வியக்கிறார்கள். ஆனால் எல்லார் தரப்பிலும் கமல் ஒரே விதமான பதில் கொடுப்பதை நாம் பார்க்கலாம். தன்னை யாராவது மேதை என்று பாராட்டினாலும் ஏதோ ஒரு படத்திற்காக தன்னை பாராட்டினாலும் அந்த பாராட்டை கமல் தான் மட்டும் எடுத்துக் கொள்ளமாட்டார். பதிலாக அவர்கள் பாராட்டி பேசிய அந்த ஒரு காட்சியோ , படமோ , பாடலோ உருவான விதத்தைப் பற்றி பேசுவார். அதில் தன்னுடைய உழைப்பு எவ்வளவு மற்றவர்களின் பங்களிப்பு என்ன என்பதை விளக்கிச் சொல்வார். திறமைசாலி என்று ஒருவரை பாராட்டுவது ஏதோ ஒரு வகையில் இன்னொரு மனிதனின் ஆற்றலை குறைத்து மதிப்பிடுவது என்பதை கமல் நன்றாக உணர்ந்தவர். அதனால் தான் அவரை திறமைசாலி என்று யாராவது பாராட்டினால் அதற்கு பின் இருக்கும் உழைபையும் அனுபவத்தையும் அவர் சொல்வார். 


 நடித்ததில் சவாலான படம் எது?


விக்ரம் படத்தின் வெற்றிவிழாவின் போது ஊடகவியலாளர பரத்வாஜ் ரங்கன் கமலிடம் ஒரு கேள்வி கேட்கிறார். " நீங்கள் நடித்ததிலேயே சவாலான ஒரு படம் என்றால் எதை சொல்வீர்கள். உடனே உங்கள் நினைவுக்கு வரும் படம் எது ?". இந்த கேள்விக்கு கமல் கொடுத்த பதில் இதுதான்.


" உடல் ரீதியான வலிகளை கஷ்டம் என்று சொல்ல முடியாது. 'No Pain No Gain ' அதுதான் முதல் ரூல். ரசிகர்களிடம் போய் எனக்கு வியர்த்தது , இடுப்பு வலி இருந்தது என்று சொல்ல முடியாது. என் கால் உடைந்திருந்தாலும் நான் நல்ல ஆடுகிறேனா என்பதுதான் அவர்களுக்கு முக்கியம். என் காலில் இந்த இடத்தில் அடி பட்டிருந்தது என்று நான் ஏன் ஆடியன்ஸுக்கு சொல்ல வேண்டும். பிச்சைக்காரனைப் போல் என் புண்ணை காட்டி காசு கேட்க மாட்டேன். என் திறமையை காட்டிதான் காசு கேட்பேன் " என்று கமல் கூறியுள்ளார்.


கொஞ்சம் ஆவேசமான பதிலாக இருந்தாலும் இந்த பதிலில் இருக்கும் அர்த்தம் சினிமா கலைஞர்களை கடவுள்களாக பார்க்க வேண்டாம் என்பதையே  இந்த பதில் வலியுறுத்துகிறது.