வேகமாக மாறிவிட்ட உலகில் மனிதம் என்பது நாளுக்கு, நாள் குறைந்து கொண்டே வருகிறது. யாருக்கும் உதவும் நேரம் நமக்கு இல்லை என்று தவறாக புரிந்து கொண்டு வாழ்வை நடத்திக்கொண்டுள்ளோம், சகா மனிதனுக்கு ஒரு பிரச்சனை என்றாலே திரும்பி பார்க்க நேரமின்றி ஒடுகிறோம். இருப்பினும், எந்த சூழலிலும் மனிதநேயத்தை விட்டுக்கொடுக்காமல் பிறருக்கு உதவும் குணத்தோடு சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.


எத்தகைய அவசர வேலையாக சென்று கொண்டிருந்தாலும் சகமனிதன் ஒருவர் துன்பப்படுவதை பார்க்க நேர்ந்தால் உடனடியாக இறங்கி ஓடிச்சென்று உதவும் நபர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் ஆடு, மாடு, நாய் போன்ற பிற உயிர்களிடத்தில் அன்பும், பரிதாபமும் காட்டும் உயிர்நேய பண்பாளர்கள் வெகு சிலர் உண்டு. இதுபோன்ற உயிர்நேய பண்பாளர்களை திரைப்படங்களில் தான் அதிகம் பார்க்க முடியும் என்றாலும், இன்றைய நவீன டிஜிட்டல் வசதிகள் மேம்பட்டுவிட்ட காரணத்தால் உலகில் எங்கு நடந்தாலும் வீடியோவாக காட்சியாகவே நம் கண் முன் வந்து நிற்கிறது. அப்படி ஒரு வீடியோ தற்போது ட்விட்டரில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.



பூங்கா அருகே நாய் ஒன்று திடீரென சுருண்டு விழுகிறது. அருகில் நின்று கொண்டிருந்த நபர் ஓடோடிச் சென்று அந்த நாய்க்கு உயிர்மூச்சை திரும்ப கொண்டுவரும் சிபிஆர் முறை சிகிச்சையை உடனடியாக மேற்கொள்கிறார். விடாமல் அந்த நாயின் வாயில் ஊதியும், உடலை அழுத்தியும் சிகிச்சை அளிக்க அளிக்க அந்த நாய் துடிக்க துவங்குகிறது. இறுதியில் உயிர் பிழைத்த நாய், அவர்தான் காப்பாற்றினார் என்று அறிந்து அவர் மீது குதித்து விளையாடியது. காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்த உயிர் நேயப் பண்பாளரை பாராட்டும் வகையில் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.  இந்த நடவடிக்கை வியப்பளிக்கிறது என்று பலர் கமென்ட் செய்துவருகின்றனர். 






சில நாட்களுக்கு முன்பாக தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணியாற்றிய முன்னாள் ஓட்டுநர் ஒருவர் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அங்கே குரங்கு ஒன்றை தெரு நாய்கள் துரத்தி கொண்டிருப்பதைப் பார்த்தார். அவசர, அவசரமாக மரத்தில் ஏறிய குரங்கு மயங்கி கொண்டிருப்பதை பார்த்த அவர், உடனடியாக மரத்தில் ஏறி குரங்கை மீட்டு வந்தார். பின்னர், அவர் உயிர்காக்கும் சிகிச்சையை குரங்குக்கு அளித்து மருத்துவமனையில் சேர்த்தார். இருப்பினும், ஓரிரு நாட்களுக்கு பிறகு அந்த குரங்கு உயிர் இழந்து விட்டது. ஆனாலும் இப்படிப்பட்ட உணர்வாளர்கள் இருக்கும் உலகில் ஆடி கார் வைத்து உறங்கிக்கொண்டிருக்கும் நாயை வேண்டுனென்றே ஏற்றி செல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.