‛வெந்து தணிந்தது காடு... வெக்காலி யாருக்காச்சும் வணக்கத்த போடு’ என்று தியேட்டர் வாசலில் கடந்த சில மாதங்களாக கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார் கூல் சுரேஷ். கிட்டத்தட்ட வெந்து தணிந்தது காடு படத்திற்கான புரமோஷனை பல மாதங்களுக்கு முன்பே துவங்கியதும் அவர் தான். அவர் வழியில், அதிகபட்ச புரமோஷனை சந்தித்த படமும் அதுவாக தான் இருக்கும்.


ஒரு வழியாக வெந்து தணிந்தது காடு இன்று வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பின் வெளியான சிம்பு படம் என்பதால், அவரது ரசிகர்கள் FDFS காண காத்துக் கிடந்தனர். சென்னை கமலா தியேட்டரில் காலை 4:30 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. முதல்நாள் இரவு 10 மணிக்கெல்லாம் தியேட்டர் வாசலில் குவிந்த ரசிகர்கள், ஆட்டம் பாட்டம் என கொண்டாடி தீர்த்தனர். 






நேரம் செல்ல செல்ல... ஒரு வழியாக பொழுது விடிந்தது. தியேட்டர் வாசலும் திறந்தது. சிம்பு சிறப்பு காட்சி காண வரமாட்டார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததால், அவரை அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் அனைவரின் எதிர்பார்ப்பும், கூல் சுரேஷ் மீது இருந்தது. எல்லா படத்திற்கும் வந்து ‛வெந்து தணிந்தது காடு... அந்த படத்தோடு பெயருக்கு வணக்கத்த போடு’ என்று கத்திக் கொண்டிருந்தவர். ஒரிஜினல் வெந்து தணிந்தது காடு படத்திற்கு எப்படி வராமல் இருப்பார்?


சிவப்பு கலர் ‛மொட்டை மாடி’ BOOM கார் ஒன்று வந்தது. உள்ளே இருந்தது கூல் சுரேஷ் தான். ரசிகர்கள், சிம்புவே வந்ததைப் போல ஆர்ப்பரித்தனர். தலைவனுக்கு அது போதாதா, உடனே காரின் மொட்டை மாடியை திறந்து, மேலே எழும்பினார். அங்கு ஆர்ப்பரித்த ரசிகர்களை விட ஒரு படி மேலே போய், வழக்கமான தனது பாணியில் அவர் ஆர்ப்பரித்தார். 


காரைச்சுற்றி நின்று கொண்டிருந்த ரசிகர்கள், இன்னும் ஒரு படி மேலே போய், கூல் சுரேஷ் மீது பாயத் தொடங்கினர். மேலாடை இல்லாமல் அரை நிர்வாணத்தில் நின்று கொண்டிருந்த சிம்பு ரசிகர் ஒருவர், குபீர் என கார் மீது பாய்ந்து, கூல் சுரேஷை அணைத்துக் கொண்டார். ரசிகரின் அந்த பாசத்தை புரிந்து கொண்ட கூல் சுரேஷூம் அவரை ஆஸ்வாசப்படுத்தி, இறக்கிவிட்டார். அவ்வளவு தான். அடுத்தடுத்து சிலர் கார் கண்ணாடி மீது பாய்ந்து, கூல் சுரேஷை நோக்கி பாய்ந்தனர். 






 


ஒரு கட்டத்தில் சுமை தாங்க முடியாமல், கார் கண்ணாடியின் முன்புறம் நொறுங்கியது. நிலைமை மோசமானதை அறிந்த கூல் சுரேஷ், மெட்டை மாடியை இறக்கிவிட்டு, கார் உள்ளே சென்றார். நஷ்டத்தோடு விடியலை தொடங்கிய அவர், அந்த சோகத்தோடு தியேட்டருக்குள் சென்றார். 


அங்கு அவரை பிரபல இணையதளம் போட்டி எடுத்த போது,


‛‛பூம் காரில் நல்லா கெத்தா தான் வந்தேன்... ரசிகர்கள் கார் மீது ஏறி கண்ணாடி உடைந்து விட்டது. அது வந்து அதிர்ச்சியா இருந்தாலும், அது இன்ப அதிர்ச்சி தான். ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருப்பதை உணர முடிந்தது. கார் கண்ணாடி உடைந்தாலும், என் இதயம் உடையவில்லை. ரசிகர்கள் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த கார் கண்ணாடி விலை எவ்வளவு தெரியுமா... என்ன சொல்றதுனு தெரியல. தர்மசங்கடமா தான் இருக்கு... இந்த மாதிரி நேரத்துல ரசிகர்கள் கொஞ்சம் அமைதியா இருக்கணும். ஆள் பாதி ஆடை பாதி மாதிரி, ஆள் பாதி கார் பாதி என்கிற காலகட்டம் வந்துவிட்டது.