தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான சத்யராஜ், தற்போது பல படங்களிலும் குணச்சித்திர, காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வீட்ல விசேஷம் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
அவர் எப்போதுமே மேடைகளில் கமல்ஹாசனை புகழ்ந்து பேசுவது வழக்கம் .சினிமா நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய சத்தியராஜ் தன்னை கதாநாயகனாக மாற்றியவர் நடிகர் கமல்ஹாசன் என்றார். “ நான் எப்போதுமே வில்லனாகவே நடித்து வந்தேன்.ஒரு 75 படங்கள் வில்லனாக நடித்து , ஹீரோவாக நடித்த சமயம் . அப்போ என்னை வைத்து மிகப்பெரிய வெற்றிப்படத்தை தயாரித்தவர் கமல்ஹாசன் . அதுதான் கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு. எனக்கு போலீஸ் கதாபாத்திரம் கொடுத்திருந்தார். மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 100 நாட்களுக்கு மேல் ஓடியது. அதன் பிறகு பெரும்பாலான படங்களில் நான் காவல்துறை அதிகாரியாகத்தான் நடித்தான்.
அந்த கதாபாத்திரம் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை அன்றே கணித்தவர் கமல்ஹாசன்தான். அந்த படத்திற்கு முன்னதாக மோகன்லால் நடித்த போயிங் போயிங் திரைப்படத்தில் நடிக்க நான் அவரிடம் கேட்ட பொழுது , ஏன் படத்தில் மூன்று கதாநாயகி என்பதாலா ? என என்னை கலாய்த்தார் . நான் இல்லை சார் கதை நல்ல தமாசா இருக்கிறது என்றேன். உடனே கமல்ஹாசன் இல்லை வேண்டாம்...நான் வேற கதை தருகிறேன் என்றார். நான் நாத்திகவாதி , அவரும் நானும் மேடைக்கு பின்னால் நிறைய பேசுவதுண்டு. அவரை பற்றி என்னால் எந்த மேடையிலும் பேசாமல் இருக்க முடியாது “ என்றார்.
இதே போல சத்தியராஜ் சமீபத்தில் மனதின் மையம் அறக்கட்டளை சார்பில் நேசம் என்ற தற்கொலை தடுப்பு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அதிகரித்து வரும் தற்கொலை தொடர்பான செய்திகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நடிகர் என்பவருக்கு ஐன்ஸ்டீன் அளவுக்கு எல்லாம் விஷயம் தெரியும் என நினைக்கக்கூடாது. இது சமூகத்தின் மிகப்பெரிய தவறு. நீங்கள் ஏன் நடிகர், நடிகைகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்?” என கேள்வியெழுப்பிய சத்யராஜ், “நாங்கள் ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் என்றால் நடிப்போம். அவ்வளவு தான். எனவே எங்களுக்கு சோறு மட்டும் போடுங்கள். தலையில் வைத்து கொண்டாடாதீர்கள். இதுதான் எனக்கு ஊடகங்கள் மேல் உள்ள வருத்தம். நடிகர்கள் யாரும் காரல் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்லது ஏதோ அறிஞர்களோ இல்லை என்பதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்” என கூறியிருந்தது வைரலானது.