உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2022 போட்டிகள் 10ஆம் தேதி முதல் பெல்கிரேட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து சுமார் 800 மல்யுத்த வீரர் வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பல முன்னணி வீரர் வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 


இந்நிலையில் மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் வினேஷ் போகட் பங்கேற்றார். இவர் முதல் சுற்றுப் போட்டியில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். எனினும் இவரை முதல் சுற்றில் வீழ்த்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு சென்றதால் இவருக்கு வெண்கலப் பதக்க போட்டிக்கு செல்லும் ரெபிசார்ஜ் சுற்று வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பாக செயல்பட்ட வினேஷ் போகட் வெண்கலப் பதக்க போட்டிக்கு முன்னேறினார். 


நேற்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் வினேஷ் போகட் 2021 உலக ஜூனியர் சாம்பியன் ஜோயன் மலம்கிரினை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் வினேஷ் போகட் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இதன்காரணமாக இந்தப் போட்டியை 10-0 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினார். 


 






இதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 


வெண்கலப் பதக்க போட்டியில் நிஷா தாஹியா:


மகளிருக்கான 68 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிஷா தாஹியா பங்கேற்றார். இவர் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் நிஷா தாஹியா ஜப்பான் நாட்டின் அமி இஷியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளை சேகரித்து வந்தனர். இறுதியில் இந்தப் போட்டியை ஜப்பான் வீராங்கனை அமி இஷி 5-4 என்ற கணக்கில் வென்றார். அரையிறுதியில் தோல்வி அடைந்ததன் மூலம் நிஷா தாஹியா இன்று நடைபெறும் வெண்கலப் பதக்க போட்டியில் பங்கேற்க உள்ளார். 


ஃப்ரீஸ்டைல் இந்திய ஆடவர் அணி: 


ரவி தஹியா(57 கிலோ எடைப்பிரிவு), பங்கஜ் மாலிக்(61 கிலோ எடைப்பிரிவு), பஜ்ரங் புனியா(65 கிலோ எடைப்பிரிவு), நவீன் மாலிக்(70 கிலோ எடைப்பிரிவு), சாகர் ஜக்லான்(74 கிலோ எடைப்பிரிவு), தீபக் மிர்கா (79 கிலோ எடைப்பிரிவு), தீபக் புனியா(86 கிலோ எடைப்பிரிவு), விக்கி ஹூடா(92 கிலோ எடைப்பிரிவு), விக்கி சாஹர் (97கிலோ எடைப்பிரிவு), தினேஷ் தன்கர்(125 கிலோ எடைப்பிரிவு)


ஃப்ரீஸ்டைல் மகளிர் அணி: 


வினேஷ் போகட்(53 கிலோ எடைப்பிரிவு), சுஷ்மா சோகீன்(55 கிலோ எடைப்பிரிவு), சரிதா மோர்(57 கிலோ எடைப்பிரிவு), மான்சி அஹல்வாட்(59 கிலோ எடைப்பிரிவு), சோனம் மாலிக்(62 கிலோ எடைப்பிரிவு), ஷெஃபாலி (65 கிலோ எடைப்பிரிவு), நிஷா தஹியா(68 கிலோ எடைப்பிரிவு), ரித்திகா(72 கிலோ எடைப்பிரிவு), பிரியங்கா(76 கிலோ எடைப்பிரிவு)