விஜய் டிவி நட்சத்திரங்கள் பலரும் இன்று வெள்ளி திரையில் நடிகர்களாக கலக்கி கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் வெள்ளி திரையில் ஒரு துணை நடிகராக ஆனால் கால் பதித்திருந்தாலும் தற்போது ஒரு ஹீரோவாக களம் இறங்குகிறார் வி.ஜே. ரக்ஷன். 


 



துல்கர் சல்மான் நண்பனாக :


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரக்ஷன். அதனை தொடர்ந்து மிகவும் பிரபலமான காமெடி கலந்த குக்கிங் நிகழ்ச்சியான  'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றவர் ரக்ஷன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 சீசன்களையும் ரக்ஷன் தான் தொகுத்து வழங்கி வந்தார். பிறகு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். 


 






 


ஹீரோவாகும் தொகுப்பாளர் ரக்ஷன் :


துணை கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ரக்ஷன் தற்போது இயக்குனர் யோகேந்திரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகிறார். இப்படத்தில் நடிகை சிம்ரன் பரீக், பிராங்க்ஸ்டெர் ராகுல், விஜய் டிவி கலக்க போவது யாரு புகழ் தீனா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது. இப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினர் படக்குழுவினர். படத்தின் டைட்டில், ரிலீஸ் தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 






 


விஜய் டிவி ஸ்டார்ஸ் பலரும் இன்று சினிமாவில் :


 
விஜய் டிவி மூலம் சினிமாவில் நுழைந்து பெரிய அளவில் பிரபலமான நடிகர்கள் பலர். தமிழ் சினிமாவில் இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று வெற்றி பெற்று, தொகுப்பாளராக முன்னேறி பின்னர் துணை கதாபாத்திரத்தில் நடித்து கடுமையான உழைப்பிற்கு பிறகு இன்று இந்த உயரத்தில் இருக்கிறார். அதே போல விஜய் டிவியின் மூலம் முன்னேறியவர்களில்  நடிகர் சந்தானம், ஷிவாங்கி, கவின், ராஜு மற்றும் பலர் ஜெயித்துள்ளனர்.  தொகுப்பாளர் ரக்ஷனுக்கு இந்த வாய்ப்பு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்து மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.