டைட்டானிக் பட பாணியில் தொகுப்பாளினி மணிமேகலை, தன் காதல் கணவர் ஹூசைனுடன் கார்டெலியா க்ரூஸ் சொகுசுக் கப்பலில் பயணிக்கும் வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை - புதுச்சேரி இடையே சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள கார்டெலியா க்ரூஸ் சொகுசுக் கப்பலில் பயண விரும்பிகள், சின்னத்திரை நடிகர்கள் எனப் பலரும் பயணித்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் மணிமேகலை பகிர்ந்துள்ள இந்த வீடியோ, அவரது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. மேலும், ”சின்ன வயசுல டைட்டானிக் படம் பாத்ததுல இருந்து கப்பல்ல போகும்போது இப்படி வீடியோ எடுக்க ஆசை. கார்டெலியா க்ரூஸ் ல என்னுடைய இந்த ஆசை நிறைவேறியிருக்கு” எனத் தெரிவித்துள்ளார்.
சன் மியூசிக்கில் தொகுப்பாளராக அறிமுகமாகி தமிழ் மக்களிடம் பிரபலமடைந்த தொகுப்பாளினி மணிமேகலை. சன் மியூஸிக்கில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த நேரத்தில் அவர் தனது நடன இயக்குநர் ஹுசைனுடன் காதலில் விழுந்தார்.
தொடர்ந்து அவரது வீட்டாரும் மதமும் அவரது காதலுக்கு முட்டுக்கட்டையாக மாற, தன் வீட்டை எதிர்த்து காதலர் ஹூசைனை மணிமேகலை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் திருமணம் பேசுபொருளானது. திருமணத்துக்குப் பின் விஜய் டிவிக்குச் சென்ற மணிமேகலை மிஸ்டர், அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவனம் ஈர்க்கத் தொடங்கினார்.
குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சோட்டா பீம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் கோமாளியாகத் தோன்றி இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களுக்கு சிரிப்பை வாரி வழங்கி மகிழ்வித்தது.
தொடர்ந்து வந்த சீசன் 3யிலும் மணிமேகலைக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதிலும் அவர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
தவிர தொலைக்காட்சியில் தனது பணியைத் தாண்டி மணிமேகலை எப்போதுமே தன் ரசிகர்களை தன் சோசியல் மீடியா பக்கங்களின் மூலம் மகிழ்வித்து வருகிறார்.
யூடியூப், ஃபேஸ்புக்கில் வீடியோ, இன்ஸ்டாவில் போட்டோக்கள் என ஒவ்வொரு நாளும் அதகளப்படுத்திக்கொண்டிருக்கிறார். இவை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.