பீகாரில் மகள் காதல் திருமணம் செய்த நிலையில் மருமகனை மாமனார் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


என்னதான் சமூகம் நாளுக்கு நாள் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக சொன்னாலும் நாடு முழுவதும் இன்றும் சாதி, மதம் சார்ந்த கலவரங்கள்,கொலைகள் என குற்றச்சம்பவங்கள் தொடர்கதையாகி தான் வருகிறது. இதற்கு சட்டங்களில் கடுமையான தண்டனைகள் இருந்தாலும் குற்றங்கள் குறையாமல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலின பேதமில்லாமல் இந்தியாவில் பல பகுதிகளிலும் ஆணவக் கொலைகள் சத்தமில்லாமல் அரங்கேறி வருகின்றன. 


இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே பீகார் மாநிலத்தில் நடைபெற்றுள்ள ஆணவக் கொலை சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள  பக்சர் மாவட்டத்தில் உள்ள தும்ராவ்ன் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சுனில் பதக் என்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன் மாற்று சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் நகராட்சி கவுன்சிலர் சோனு ராயின் சகோதரர் மோனு ராயை குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துள்ளார். 






இதனால் ஒருவருட காலமாக கடும் ஆத்திரத்தில் இருந்த சுனில் பதக் இந்த சம்பவத்தில் மருமகன் மோனு ராயை பழிவாங்க தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். அதன்படி கடந்த ஜூன் 5 ஆம் தேதி முடி திருத்தும் கடையில் இருந்த மருமகனை, மகன் தனு பதக்குடன் இணைந்து சுட்டுக் கொன்றார். இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில்  முடிதிருத்தும் கடையில் இருந்த மோனு ராயை  நோக்கி சுனில் பதக் துப்பாக்கியால் சுடுகிறார். 


முதலில் தப்பிக்கும் அவரை சுனில் பதக், தனு பதக் இருவரும் இணைந்து அக்கடையில் இருந்த ரேசர் பிளேடு உள்ளிட்ட பொருட்களால் கடுமையாக தாக்குகின்றனர். இதில் நிலைகுலைந்து கீழே விழும் மோனு ராயை இருவரும் மீண்டும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்று தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு இருவரும் சரணடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண