சன் டிவி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான விஜே அர்ச்சனா தற்போது ஜீ தமிழ், விஜய் டிவி என அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் மிகவும் ஒரு பிரபலமான கலகலப்பான தொகுப்பாளினியாக வலம் வருகிறார். அர்ச்சனாவின் மகள் ஸாராவும் ஒரு சில நிகழ்ச்சிகளை அம்மாவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கினார். அம்மா - மகள் இருவருமே சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமானவர்கள். அந்த வகையில் சில கடுமையான விமர்சனங்களுக்கு தன்னுடைய கருத்தினை போஸ்ட் மூலம் தெரிவித்துள்ளார் ஸாரா.


அர்ச்சனாவின் மகள் ஸாராவை வறுத்தெடுக்கும் ஒரு கும்பல் என்றுமே  இருக்கும். சோசியல் மீடியாவில் அவர் போடும் எந்த ஒரு போஸ்டாக இருந்தாலும் அதை கலாய்ப்பதை நெட்டிசன்கள் வழக்கமாக கொண்டு இருந்தனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அர்ச்சனா கலந்து கொண்ட பிறகு அவர் எந்த கன்டென்ட் கொடுத்தாலும் அது கேலி பொருளாகவே இணையத்தில் பார்க்கப்பட்டது. அது குறித்து இணையத்தில் ஏதாவது ஒரு பதிவு வந்த உடனடியாக பதிலடி கொடுத்துக்கொண்டு இருந்தார் அர்ச்சனாவின் மகள் ஸாரா. 



அர்ச்சனாவின் யூ ட்யூப் சேனலில் அவர்கள் போட்ட பாத்ரூம் வீடியோ பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் மூலம் அர்ச்சனா பல ட்ரோல்களில் சிக்கி சின்னாபின்னமானார். கேலி செய்பவர்களுக்கெல்லாம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்த ஸாரா பலரின் வெறுப்பை சம்பாதித்தார்.


வயதுக்கு மீறிய முதிர்ச்சி, சின்னப்பொண்ணுதான் என்றாலும் பார்த்தாலே பிடிக்கவில்லை, வாயாடி என பல கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார் ஸாரா. 


இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது போல தனது சோஷியல் மீடியா பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஸாரா. 


"என்னுடைய முதிர்ச்சி குறித்து ஏன் இன்னும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது? எங்களை தரக்குறைவாக பேசுவதை முதலில் நிறுத்துங்கள். 2.5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு கொடுக்கப்பட்ட பேட்டியின் கிளிப்பிங் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவுக்கு என்ன கேப்ஷன் தெரியுமா? "ஸாராவுக்கு இந்த வயசுல எவ்வளோ மெச்சூரிட்டி" என்பதுதான். பலரும் என்னை அவதூறாகவும் கிண்டலாகவும் பேசுகிறார்கள்.     


என்னுடைய வாழ்க்கையில் பல தருணங்களில் மெச்சூரிட்டிக்கும் எனக்கும் நேரடியாக தொடர்பு இருந்ததுண்டு. என்னுடைய 8 வயதில் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன், என்னுடைய தந்தையை 11 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தேன், என்னுடைய அம்மா மீது எந்த ஒரு தவறும் இல்லாத போதும் அவர் கடுமையான போராட்டங்களை சந்தித்ததை நான் பார்த்துள்ளேன், அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த பிரச்சினையும் இல்லை என்றாலும் விரிசல் ஏற்பட்டதை நான் பார்த்துள்ளேன், என்னுடைய அம்மாவுக்கு சர்ஜரி நடந்தபோது அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர பக்கபலமாக இருந்துள்ளேன். இதுபோல பல கஷ்டங்களை பார்த்து வளர்ந்த என்னுடைய கேரக்டரை ஜட்ஜ் செய்த பல்வேறு சோசியல் மீடியா தளங்களுக்கு என்னுடைய நன்றிகள். 


நான் ஒரு பிரபலத்தின் மகள், பொது வாழ்க்கையில் இருப்பதால் மக்களின் கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகிறேன் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் அதன் மூலம் என்னுடைய மெச்சூரிட்டி பற்றி பேசுவதற்கு இவ்வளவு இருக்கிறதா. ஒரே ஒரு வரியில் என்னுடைய கேரக்டரை அவதூறாக கமெண்ட் மூலம் அள்ளி வீசி விட்டு செல்வது மிகவும் எளிதானது. ஆனால் அந்த மோசமாக பதிவுகள் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் எந்த அளவிற்கு மனதளவில் காயப்படுத்துகிறது, பாதிக்கிறது என்பதை ஒரு நிமிடம் யோசித்து பார்க்கவும். 


இவை அனைதையும் மீறி உங்கள் அனைவரின் அன்பிற்கும் வெறுப்பிற்கும் நான் கடமைப்பட்டவள். அன்பு கொடுத்தவர்களுக்கு நன்றி, வெறுப்பை கொடுத்தவர்கள் விரைவில் குணமடைவீர்கள் என நம்புகிறேன்" என மிக நீண்ட போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஸாரா. 


அத்துடன் விமர்சகர்களின் கமெண்ட்களையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார் ஸாரா. 


ஸாராவின் இந்த பதிவிற்கு பலரும் ஆறுதலான கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.