அல்லு அர்ஜூன் நடிப்பில் வரும் 17ஆம் தேதி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள ‘புஷ்பா’ திரைப்படத்தில் ஆண் சமூகத்திற்கு எதிரான கருத்துகள் கொண்ட பாடல் வரிகள் இருப்பதாக சொல்லி ஆந்திராவில் எதிர்ப்பு எழுந்துவரும் நிலையில், அதே மாதிரியான ஒரு பாடலை தமிழுக்காக எழுதியிருக்கிறார் பிரபல பாடலாசிரியர் விவேகா.


’ஊ சொல்றியா மாமா இல்ல ஊஹும் சொல்றியா ’ என்று தொடங்கும் அந்த பாடலில் ஒட்டுமொத்த ஆண்களும் பெண்கள் விஷயத்தில் வீக்கானவர்கள், திருடர்கள் என்பதுபோன்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாடலாசிரியர் விவேகாவை தொடர்புகொண்டு பேசினோம்.



பாடலாசிரியர் விவேகா


கேள்வி : வணக்கம், நீங்க புஷ்பா படத்தில் எழுதியுள்ள ‘ஓ சொல்றியா, ஓஓ சொல்றியா’ பாடல் ஆண் சமூகத்தை கொச்சைப்படுத்துவதுபோல் இருப்பதாக சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனரே ?


பாடலாசிரியர் விவேகா : சத்தமாக சிரிக்கிறார். இல்லையே.. சமூக வலைதளங்களில் நம்ம ஆட்கள் எல்லாம் கொண்டாடிக்கிட்டு இருக்காங்களே. ஆண்கள் இந்த பாட்டை ரொம்பா ஜாலியா எடுத்துகிட்டு ஒரே வாழ்த்து மழை எனக்கு பொழிஞ்சுகிட்டு இருக்காங்க. ஆந்திராவில் ஏதோ சின்ன பிரச்னை வந்திருக்கிறது. ஆனால், நம்ம ஆட்கள் என்னை பாராட்டிகிட்டு இருக்காங்க.


கேள்வி : அப்படி பார்த்தால் கூட, உங்களது வரிகளில் ஒட்டுமொத்த ஆண்களும் காமத்தோடுதான் பெண்களை பார்க்கிறார்கள் என்பதுபோன்றுதானே இருக்கிறது ?


பாடலாசிரியர் விவேகா : ஆண்களை பொறுத்தவரை இந்த மாதிரியான விஷயங்களை கவுரமாகவும் பெரிதாகவும் சொல்லிக்கொள்ளக் கூடிய மனோபாவத்தை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வளர்த்து வந்திருக்கிறார்கள். அதனால, ஆண்கள் இந்த பாடல ரொம்ப ஜாலியா எடுத்துகிட்டு இருக்காங்க. இந்த பாடல் வெளியானது முதல் எனக்கு வாழ்த்துதான், வரவேற்புதான், பாராட்டுதான் வந்துகிட்டுஇருக்கு.


இதுல ஒன்னும் நான் தப்பா சொல்லலீயே, மனிதன் அப்டிங்கிறவன் இயற்கை கொடுத்த எல்லா இயல்புகளையும் கொண்டவன்தானே ? ஆணோட எதிர்ச்சொல் பெண் தானே. இந்தியாவை பொறுத்தவரை ஒரு பெண்ணை ஆண் சாதாரணமாக பார்ப்பதை கூட ரொம்ப அபூர்வமாக ஆக்கி வைத்திருந்தது நமது சமூகம். அப்படி இருந்த நிலையில், அவர்கள் பெண்ணை பார்க்கும்போது அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதுதான் அந்த பாடலின் உள்ளர்த்தம்.



இத கட்டுபாடுக்குள்ள வச்சுக்குறோம், இல்லன்னா கட்டுப்பாடற்று வச்சுக்கிறோம். ஆனால், அப்படி இல்லவே இல்லை என்பதை எந்த ஆணும் மறுத்திடமுடியாது. அதனால்தான், அவன் இப்ப இந்த பாட்ட கொண்டாடுறான்.


ஒரு பெண்ணை பார்த்தால் அவர் ஏதாவது நினைத்துக்கொள்வார் என்று பார்க்கமால் போகும் ரகமும் இருக்கிறது ; அந்த பெண் என்ன நினைத்தால் என்ன என்று பார்த்துக்கொண்டு போகிற ரகமும் இருக்கிறது.  அந்த பெண் ஏதேனும் நினைத்துக்கொள்ளும் என்பதற்காக பார்க்காமல் போவது ஒழுக்கமா ? அது எப்படி ஒழுங்கமாகும் ?


கேள்வி : அப்போ எந்த ஆணும் இதை சர்ச்சையாக தன்னை கொச்சைப்படுத்திவிட்டதாக நினைக்கவில்லை என்கிறீர்களா ?


பாடலாசிரியர் விவேகா : ஆமாம், ஒருவரும் இதை பிரச்னையா நினைக்கல. உண்மையிலேயே இத ஜாலியா எடுத்துக்கிட்டு கொண்டாடிகிட்டு இருக்காங்க. இந்த பாடல் மூலம் ஆண் ஒருவித கிளுகிளுப்புக்கு உள்ளாகிறான். அந்த மகிழ்ச்சியைதான் சமூக வலைதளங்களில் மீம்ஸ்-ஆக வெளிப்படுகிறது.