தி காஷ்மீர் ஃபைல்ஸை இயக்கிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, சம்பவம் குறித்த முழு உண்மையையும் மக்களுக்குத் தெரியப்படுத்த, தி காஷ்மீர் பைல்ஸ்: அன் ரிப்போர்ட்டை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார். இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பாளர் நதவ் லாபிட் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பிரச்சாரத்துக்காக எடுக்கப்பட்ட மோசமான படம் என்று கூறியதை அடுத்து விவேக்கின் அறிவிப்பு வந்துள்ளது. இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) ஜூரி தலைவராக இருந்த நடவ், இதுபோன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என்றும் கூறியிருந்தார்.




அவரது கருத்துக்கு பதிலளித்த விவேக் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "இந்த அர்பன் நக்சல்களுக்கும் மற்றும் இஸ்ரேலில் இருந்து வந்த பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளருக்கும் நான் சவால் விடுகிறேன். அவர்கள் இந்த படத்தின் எந்த ஒரு ஒரு ஷாட்டும், நிகழ்வோ அல்லது உரையாடலோ முழுவதுமாக உண்மையல்ல என்று நிரூபித்தால் நான் திரைப்படத்தை இயக்குவதை விட்டுவிடுவேன். ஒவ்வொரு முறையும் இந்தியாவை எதிர்க்கத் துணியும் இவர்கள் எல்லாம் யார்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.


ஊடகங்களிடம் பேசிய விவேக், "நான் இப்போது உறுதியாக இருக்கிறேன், நான் ஒரு அறிவிப்பை வெளியிட இருக்கிறேன்.எங்களிடம் பல உண்மைகள் உள்ளன. அதில் இருந்து ஒரு படத்திற்கு பதிலாக 10 படங்கள் செய்திருக்கலாம். ஆனால் ஒரே ஒரு படத்தை மட்டுமே எடுக்க முடிவு செய்தோம். ஆனால் இப்போது, ​​நான் முழு உண்மையையும் வெளியே கொண்டு வர முடிவு செய்துள்ளேன்;அதன் தலைப்பு தி காஷ்மீர் கோப்புகள் அன்ரிப்போர்ட்டு என்று இருக்கும்” எனக் கூறியுள்ளார்.


மேலும், "அன் ரிப்போர்ட்டு படம் வெப் சீரிஸ் அல்லது டாக்குமெண்டரி வடிவில் இருக்குமா என்பதை விரைவில் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன். முழு உண்மையையும் வெளியிடுவேன். இப்போது இந்த விஷயம் கலைக்கு அப்பாற்பட்டதாகி இருக்கிறது.அது இந்த நாட்டின் நற்பெயரைப் பற்றியது. என்னிடம் உள்ள தகவல்கள், ஆதாரங்கள் மற்றும் அனைத்து மக்களும் என்ன சொன்னார்கள் என்பதையும் தொகுத்து, அவற்றை நான் வெளியே கொண்டு வந்து மக்கள் முன் வைப்பேன்” எனக் கூறினார்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ், 1990களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீரி பண்டிட்கள் வெளியேறிய கதையை விவரித்திருந்தது. இந்தப் படம் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த பாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக மாறியது. இந்தப் படத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர். IFFIல் இந்திய பனோரமா பிரிவின் ஒரு பகுதியாக இந்தப் படம் காட்சிப்படுத்தப்பட்டது.