சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் - நயன்தாரா நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் விஸ்வாசம். ஜனவரி மாதம் 10-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படம் தான் 2019ம் ஆண்டில் வெளியான முதல் சூப்பர்ஹிட் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.


 



அஜித் குமார், நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் என பெரிய திரை பட்டாளம் நடித்த இப்படம் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது டி. இமானின் இசை. முதல் முறையாக அஜித் படத்திற்கு இசையமைத்திருந்தார் டி. இமான். இமானின் இசையில் விஸ்வாசம் படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். 






 


200 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை :


இப்படத்தில் இடம்பெற்ற ' கண்ணான கண்ணே...' பாடல் சித் ஸ்ரீராம் குரலில் மிகவும் அருமையாக அமைந்து இருந்தது. படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் இப்படம் புதிய மைல் கல்லை அடைந்து தற்போது சாதனையை படைத்துள்ளது. ' கண்ணான கண்ணே...' பாடல் யூடியூப்பில் 200 மில்லியன் வியூஸ்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது. பாடலாசிரியர் தாமரையின் வரிகளுக்கு இசையால் டி. இமானும் குரலால் சித் ஸ்ரீராமும் உயிர் கொடுத்து இருந்தனர்.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி கேட்ட இப்பாடல் நான்கு ஆண்டுகளை கடந்தும் ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பிடித்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறார் படத்தின் இசையமைப்பாளர் டி. இமான். 







ட்ரெண்டிங் ஹேஷ்டேக் :


மேலும் 2019 ஆண்டில் விஸ்வாசம் திரைப்படம் குறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று மிகவும் வைரலானது. ஜனவரி 1ம் தேதிக்கு முதல் ஜூன் 30ம் தேதி வரை அதிக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்த ஹேஷ்டேக் பட்டியலின் படி விஸ்வாசம் திரைப்படம் முதல் இடத்தில் இருந்தது என்ற அறிவிப்பை வெளியிட்டது ட்விட்டர் நிறுவனம். அது மட்டுமின்றி 2019ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பை போட்டி மற்றும் பொது தேர்தல் போன்றவற்றின் ஹேஷ்டேக்குகளை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்தது விஸ்வாசம் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.      


ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள 'துணிவு' படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான விஸ்வாசம் படத்தின் 'கண்ணான கண்ணே...' பாடலும் தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.