சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக கோலிவுட்டில் கால் பதித்தவர் நடிகர் விஷ்னு விஷால். கிரிக்கெட்டில் அதீத ஆர்வம் கொண்டவரான இவர், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட்டு துறையை விடுத்து சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். வெளியான முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்னு விஷால். ஆரம்பம் முதலே தனக்கு பொருத்தமான, எதார்த்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம் , முண்டாசு பட்டி, ஜீவா , இன்று நேற்று நாளை,ராட்சசன் , மாவீர் கிட்டு என இவர் தேர்வு செய்த படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதாபாத்திரங்கள் கொண்டவை. இந்நிலையில் அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் எஃப்.ஐ.ஆர் படத்தில் நடித்து வருகிறார்.விஷ்னு விஷாலுக்கு சொந்தமான விவி புரடெக்‌ஷன் இந்த படத்தை தயாரித்து வருகிறது.







இந்த படத்தில் விஷ்னு விஷாலுடன்  மஞ்சிமா மோகன் , பிக்பாஸ் புகழ் ரைசான் வில்லியம்ஸ்,ரெபா மோனிகா ஜான் என மூன்று நாயகிகள் களமிறங்கிய்யுள்ளனர். இவர்களுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்திற்கு அஷ்வந்த் என்பவர் இசையமைத்து வருகிறார்.எஃப்.ஐ.ஆர் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் உள்ளிட்ட இறுதிக்கட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியானது. இது குறித்து படத்தின் நாயகன் விளக்கமளித்துள்ளார்.







அதில் “எஃப்.ஐ.ஆர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்பது தவறான செய்தி. ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இந்த படம் திரையரங்கில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வேன். படம் திரையரங்க அனுபவத்திற்கானதாக உருவாக்கப்பட்டுள்ளது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் காத்திருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.







விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம் .இது ஒரு புறம் இருக்க  எஃப்.ஐ.ஆர் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதையை உருவாக்குமாரு  இயக்குநருக்கு கோரிக்கை விடுத்துள்ளாராம் விஷ்ணு விஷால் , முதல் பாகம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில்தான் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த செய்தியை விஷ்ணு விஷாலும் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.