நடிகர் அஜித் ரொம்பவும் இனிமையான ஒரு மனிதர் என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
லால் சலாம்
ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லால் சலாம் படம், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஷ்ணு விஷால் , விக்ராந்த் , தன்யா பாலகிருஷ்ணா, அனந்திகா சனில்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுடம் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் நேற்று பிப்ரவரி 5-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அஜித் பற்றி விஷ்ணு விஷால்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. நடிகர் விஷ்ணு விஷால் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் வெள்ள நீர் சூழந்தது. மேலும் தனது அம்மாவின் சிகிச்சைக்காக சென்னை வந்திருந்த பாலிவுட் நடிகர் ஆமிர்கான் விஷ்ணு விஷால் வீட்டில் விருந்தினராக தங்கியிருந்தார். வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டார் விஷ்ணு விஷால். இதனைத் தொடர்ந்து மீட்புப் படையினர் அவரையும் ஆமிர் கானையும் படகில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றார்கள்.
லால் சலாம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளின் போது நடிகர் விஷ்ணு விஷால் அஜித் குமார் பற்றி பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “வெள்ளத்தின் என்னுடைய கார் முழுவதும் மூழ்கிவிட்டது. வெள்ள நீர் தரைத்தளத்தில் இருந்து இன்னும் மேலே வந்துவிட்டால் என்கிற பயத்தில் தான் வீடியோ வெளியிட்டேன். உடனே மீட்பு படையினர் எங்களை மீட்டார்கள். இவர்கள் செய்யும் வேலைகள் எல்லாம் வெளியே தெரிவதில்லை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா என்று நான் ஆமிர் கானிடம் கேட்டேன். அவர்கள்தான் நம்மை காப்பாற்றுகிறார்கள். தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்.
மீட்பு படையினர் எங்களை மீட்டபிறகும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல எங்களுக்கு கார் தேவைப்பட்டது. இந்த தகவல் அஜித் சாருக்கு தெரிந்ததும் அவர் எங்களுக்காக காரை ஏற்பாடு செய்தார். பின் எங்களுக்கு ஃபோன் செய்துவிட்டு எங்களை வந்து சந்தித்தார். அஜித் ஒரு ஸ்வீட் ஆன மனிதர். மற்றவர்கள் செய்த உதவியை சொல்லும்போது அவர் செய்த உதவியையும் சொன்னால்தான் முழுமையாகும் என்று சொன்னேன்” என்று விஷ்ணு விஷால் பேசியுள்ளார்.