நடிகர் விஷால் நடிப்பில் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக தயாராக உள்ள திரைப்படமான 'லத்தி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று நடிகர் விஷால் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். இந்த பிரஸ் மீட்டில், பல கேள்விகள் நடிகர் விஷாலிடம் கேட்கப்பட்டது.
சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் :
முதலில் நடிகர் விஷால் தனது நெருங்கிய நண்பர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அந்த சமயத்தில் நடிகர் விஷாலிடம் ரம்மி சர்க்கிள் விளம்பரத்தில் நடிப்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த நடிகர் விஷால் 'என்னை பொறுத்தவரையில் இது போன்ற சூதாட்டங்கள் தடை செய்யப்படவேண்டும். எத்தனை குடும்பங்கள் இதுபோன்ற ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன். என்னுடைய டிரஸ்ட் மூலம் இந்த எண்ணிக்கையை பற்றி கணக்கிட்டுள்ளோம். இது போன்ற சூதாட்டங்களால் பலர் உயிரை இழந்துள்ளனர், பலரின் குடும்பம் நடு ரோட்டுக்கு வந்த நிலைமையும் உள்ளது.
நமது கைகளால் சம்பாதிக்கும் பணம் மட்டுமே நிலைக்கும். இது போன்ற சூதாட்டத்தில் வரும் பணம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு வரும் அது நிரந்தமானது அல்ல. எப்படி செக்ஸ் சார்ந்த இணையதளங்களை எல்லாம் தடை செய்தார்களோ அதே போல ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் இணையதளங்களையும் முழுமையாக தடைசெய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இதற்காக என் மீது கேஸ் போட்டால் கூட எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என கூறினார்.
தனிப்பட்ட கருத்து :
பலர் இது போன்ற வெப்சைட்டுகளுக்கு நடிக்கிறார்கள் அவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன என விஷாலிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்கையில் "அது அவரவரின் விருப்பம். அவர்களுக்கு பணம் கிடைக்கிறது அதனால் அதில் நடிக்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட விஷயம், தனிப்பட்ட கருத்து. என்னை பொறுத்தவரையில் அது தப்பு. வெளிப்படையாக நான் ஒரு விஷயத்தை சொல்றேன். என்னையும் ரம்மி சர்க்கிள் விளம்பரத்தில் நடிக்க அணுகினார்கள் ஆனால் நான் அதை மறுத்து விட்டேன். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. என்னுடைய உள்மனம் சொல்கிறது அதை நான் செய்தால் என்னால் இன்னும் சில உயிர்கள் பறிபோகும் என தோன்றியது. அதற்கு நான் காரணமாக இருக்கக் கூடாது என நினைத்தேன். அதனால்தான் அந்த வாய்ப்பை தட்டி கழித்து விட்டேன்" என தெரிவித்தார் நடிகர் விஷால்.