கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்மனுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.
இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 21-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் கீழ வீதியில் இருந்து புறப்பட்டு மாட வீதிகளில் வலம் வரும் இத்தேரை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆனித் திருமஞ்சன விழா நாளை நடைபெற உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜரும், சிவகாம சுந்தரியும் நடனம் ஆடியபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். நாளை நடைபெறும் இந்த உற்சவத்தைக் காண ஏராளமான சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
நேற்று நடராஜர் கோவிலில் பக்தர்கள் நான்கு நாட்கள் கனகசபை மீது ஏற கூடாது என அறிவிப்பு பலகை வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.