அடுத்த தலைமுறைக்கு எது தவறு என்பதைக் சொல்வதற்காகத்தான் எனது படங்களில் வன்முறைக் காட்சிகளை வைக்கின்றேன். ஒரு மருத்துவர் ஊசி போடும்போது நமக்கு வலிக்கத்தான் செய்யும் ஆனால் அது நமது உடலில் இருக்கும் நோயை குணப்படுத்த உதவுவதைப் போல் எனது படங்களில் அடுத்த தலைமுறையினருக்கு எது தவறு எனச் சொல்வதற்காகத்தான் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட வன்முறைக் காட்சிகளை நான் படமாக்குகின்றேன் என ஏபிபி நடத்திய ஐடியாஸ் ஆஃப் இந்தியா 3.O என்ற நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லி பேசியுள்ளார்.
மேலும் அவர், ஒரு சாதாரண மனிதன் 300 ரூபாய் செலவு செய்து ஒரு படத்தை பார்க்க வருகிறார். படம் மட்டும் இல்லாமல் அவர் வீட்டில் இருந்து திரையரங்கிற்கு வந்து செல்வதற்கு என மொத்தம் 6 மணி நேரம் ஆகின்றது. இந்த நேரத்திற்கும் அவர் செலுத்தும் 300 ரூபாய்க்கும் நான் உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.
நான் தமிழில் இயக்கிய நான்கு படங்களிலும் சரி, இந்தியில் இயக்கிய ஒரு படத்திலும் சரி இதைத்தான் கடைபிடித்துள்ளேன். நான் ஹாலிவுட் சினிமா உருவாக்கினால் கூட இதையேதான் கடைபிடிப்பேன். அடுத்த மூன்று ஆண்டுகளில் நான் ஹாலிவுட்டில் இருப்பதற்கான அறிவிப்புகள் வரும்.
எனது படங்களில் வன்முறைக் காட்சிகள் இருப்பதற்கு காரணம் எது தவறு என்பதை சுட்டிக்காட்டத்தான். விவசாயிகள் படும் கஷ்டத்தை நான் எனது படத்தில் காட்சிப் படுத்துகின்றேன் என்றால், அதனால் எதாவது மாற்றம் நிகழும் என்றால் மகிழ்ச்சிதான். ஒரு தவறை சுட்டிக்காட்டும் இடத்தில் நான் இருக்கின்றேன். கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கின்றார். நல்ல விஷயங்களை எனது படத்தின் மூலம் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என நினைக்கின்றேன். அது நான் படம் இயக்குகின்றேன் எனது தயாரிப்பாளர் பணம் சம்பாதிக்கின்றார் என்பதைக் காட்டிலும் முக்கியமானது என நான் நினைக்கின்றேன். இதன் காரணமாகத்தான் எனது படங்களில் அதிக சமூக கருத்துக்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றேன்.
எதில்தான் அரசியல் இல்லை. எல்லாவற்றிலும் அரசியல் இருக்கின்றது. அரசியல் நமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்கின்றது. அரசியல் கட்டாயம் பேச வேண்டும். அரசியல் பேசவில்லை என்றால் அது ஜனநாயகமாக இருக்க முடியாது.
எனது படங்களில் கதாநாயகர்கள் சேவகர்களாக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். அதாவது, கடவுளை காண நீண்ட வரிசையில் காத்துக்கொண்டு இருக்கும் பக்தன் இறுதியாக கடவுளைக் காணும்போது பக்திப் பரவசத்தில் காணப்படுவான். அதுபோல எனது கதையின் நாயகனைக் காணும்போது ரசிகர்கள் உணரவேண்டும் என நான் நினைக்கின்றேன்” இவ்வாறு அட்லீ பேசினார்.