அதிரடி திருப்பங்களுடன் உருவாகியுள்ள ஃபைண்டர் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அரபி புரொடக்ஷன்ஸ் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் தயாரித்துள்ள படம் “ஃபைண்டர்”. நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள் இப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது. பெரும் சிரமங்களுக்கிடையே இந்த “ஃபைண்டர்” திரைப்படம் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைக் குவித்து வருகிறது. செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் சார்லி தன் குடும்பத்தோடு இணையத் துடிப்பதை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
மேலும் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத்தரும் நிறுவனத்தை பற்றிய உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஃபைண்டர் படம் எடுக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க பரபரப்பான காட்சிகளுடன், அதிரடி திருப்பங்களுடனும் அட்டகாசமான கதையுடன் இந்த படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே ஃபைண்டர் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், படமும் பாராட்டை பெற்றுள்ளது. வினோத் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சார்லியை தவிர்த்து சென்ட்ராயன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க, மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்களாக அறிமுகமாகியுள்ளனர்.
இந்த படத்தின் இயக்குநர் வினோத் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ரொம்ப சிரமப்பட்டு, ஒன்றரை ஆண்டு உழைப்புக்கு பின் ஃபைண்டர் படம் தமிழ்நாடு முழுவதும் 80 தியேட்டர்களில் படத்தை வெளியிட்டுள்ளோம். படத்துக்கு நார்மலான ஒரு ஓப்பனிங் கிடைத்துள்ளது. படம் பார்த்த மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஃபைண்டர் படத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகர் சென்ட்ராயன், “ஃபைண்டர் படத்தில் அழகான கேரக்டர் பண்ணிருக்கேன். படம் சூப்பரா வந்துருக்கு. ஆனால் இந்த படத்துக்கு ஒரு காட்சி மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர், இயக்குநர்கள், தியேட்டர் சங்கங்கள் புதுப்படத்துக்கு வாய்ப்பு கொடுத்தால் எல்லாரும் ஜெயித்த மாதிரி நாங்களும் ஜெயிப்போம். மக்களும் புதுவிதமான கதையை எதிர்பார்க்கிறார்கள்” என கேட்டுக் கொண்டார்.
ஃபைண்டர் படத்திற்கு சூர்ய பிரசாத் இசையமைத்துள்ளார். பிரசாந்த் வெள்ளிங்கிரி ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் தமிழ்குமரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும் படிக்க: Ghilli : கில்லி படத்தில் வரும் லைட் ஹவுஸ் உருவான கதை தெரியுமா.. கலை இயக்குநர் மணிராஜ் சுவாரஸ்ய தகவல்