கில்லி படம் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்தப் படத்தில் அனைவருக்கும் பிடித்த லைட் ஹவுஸ் எப்படி உருவானது என்று பார்க்கலாம்.


கில்லி ரீரிலீஸ்


தரணி இயக்கத்தில் விஜய் நடித்த கில்லி படம் இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு கில்லி படம் தற்போது தமிழ்நாடு உட்பட இன்னும் பல்வேறு நாடுகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 


சிங்கப்பூர் , மலேசியா , பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் பாரிஸ் மற்றும் தமிழ்நாடு, அந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் வெளியாகியுள்ள கில்லி படத்தை ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகிறார்கள். ஆக்‌ஷன் , பாட்டு , ரொமான்ஸ் என எல்லா விதங்களிலும் இன்றுவரை சலிப்படையாமல் இந்தப் படத்தின் காட்சிகள் இருபதாக ரசிகர்கள் கூறியுள்ளார்கள். அடுத்தடுத்த காட்சிகள் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கில்லி படத்தில் அனைவரையும் கவர்ந்த அந்த லைட் ஹவுஸ் எப்படி உருவானது என்பதை தெரிந்துகொள்வோம்.


கில்லி படத்தின் லைட் ஹவுஸ் உருவான கதை


கில்லி படத்தின் சுவாரசஸ்யம் இன்று வரை குறையாமல் இருப்பதற்கு அந்தப் படத்தின் நிலவியல்] எளிமையாக சொன்னால் லோகேஷன்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. இப்படத்தில் விஜய் ஒரு போலீஸ்காரரின் மகனாக இருப்பதால் ஒரே மாதிரியான வீடுகளைக் கொண்ட அரசு குடியிருப்பில் அவர் வசிக்கிறார். இதில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த அம்சம் என்றால் எல்லா வீட்டு மொட்டை மாடிகளுக்கும் தாவி குதித்து சென்றுவிட முடியும். இந்த சூழலில் நடக்கும் சண்டைக்காட்சிகளை மிக சுவாரஸ்யமாக இயக்குநர் கையாண்டிருப்பார்.


எல்லாவற்றுக்கும் மேல் தூரத்தில் இருக்கும் லைட் ஹவுஸ் , விஜய் மற்றும் த்ரிஷா அதில் ஏறி ஒளிந்துகொள்ளும் காட்சிகள் எல்லாம் படத்தின் அழகியல் சிறப்புகள். ஆனால் இந்த குடியிருப்பு இந்த லைட் ஹவுஸ் எல்லாமே செட் தான் ஒரே போடாக போட்டு உடைத்துக்கிறார் படத்தின் கலை இயக்குநர் மணி ராஜ். 


நேர்காணல் ஒன்றில் இந்த லைட் ஹவுஸ் உருவான பின்னணியை மணி ராஜ் விளக்கியுள்ளார். அதில் அவர் "கில்லி படம் முதலில் தெலுங்கில் எடுக்கப்பட்ட படம். ஹைதராபாதில் இந்த படம் எடுக்கப்பட்டது சார்மினார் கோபுரம் இருந்த ஏரியாவில். எங்கிருந்து பார்த்தாலும் அந்த கோபுரம் தெரியும்படி அழகான ஒரு இடம் அது.




அதே படத்தை இங்கு எடுக்கும்போது சார்மினார் இங்கு இல்லை. அதற்கு பதிலாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தான் லைட் ஹவுஸ் ஒன்றை உருவாக்கலாம் என்று திட்டமிட்டோம். லைட் ஹவுஸ் மற்றும் கடல் ஆகிய இரண்டும் எங்கிருந்து பார்த்தாலும் எனக்கு தெரியணும் என்று இயக்குநர் தரணி சொல்லிவிட்டார். இதற்கு தேவையான செட் எல்லாம் போட தயாரிப்பாளர் சம்மதித்து விட்டார் ஆனால் அடுத்த ஒரு மாதத்திற்குள் விஜய் சொன்ன தேதிக்குள் வந்துவிடுவார் அதற்குள் இந்த வேலைகளை எல்லாம் முடிக்க வேண்டும் என்று சொன்னார்.


மகாபலிபுரத்தில் ஒரு காலியான இடத்தில் படத்திற்கான செட் வேலைகளை இரவு பகலாக செய்தோம். இந்த வீடுகளை எல்லாம் வெறும் ஐந்தடிக்கும் குறைவான உயரத்தில் கட்டி அதில் எல்லா மொட்டை மாடிகளையும் ஒரே அளவில் கட்டினோம். பின் கொஞ்சம் தள்ளி இறக்கமான ஒரு இடத்தில் லைட் ஹவுஸை உருவாக்கினோம். அப்படியும் ஒரு மாதத்திற்குள் வேலை முடியவில்லை. இந்த வேலை முடியும் வரை விஜய் தனக்கு இருந்த மற்ற காட்சிகளில் நடித்துவிட்டு திரும்பி வந்தார் " என்று கலை இயக்குநர் மணிராஜ் தெரிவித்துள்ளார்.