நடிகர் சிலம்பரசன் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 


தமிழ் சினிமா இயக்குநர்களில் முக்கியமான நபர் கௌதம் வாசுதேவ் மேனன். இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், தொடர்ந்து தயாரிப்பாளர், நடிகர் உள்ளிட்ட பல துறைகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இப்படியான நிலையில் கௌதம் மேனன் தனது 6வது படமாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியானது. இன்றோடு இப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.






சிலம்பரசன், திரிஷா, விடிவி கணேஷ், நாக சைதன்யா, சமந்தா, கிட்டி, பாபு ஆண்டனி, உமா பத்மநாபன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரித்த இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் விநியோகம் செய்தது. இந்த படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் நடிகையாக சமந்தா அறிமுகமானார். 


மேலோட்டமாக பார்த்தால் தமிழ் சினிமா பார்த்து பார்த்து பழகிய கதை தான் என்றாலும் அதில் வயது, சினிமாவை விரும்பும் ஹீரோ, வெறுக்கும் ஹீரோயின் குடும்பம், காதல், பிரிவு என அனைத்தையும் கலந்து கட்டி அழகான கவிதை படைத்திருப்பார் கௌதம் மேனன். அதுவே படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 


இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் சத்தமே இல்லாமல் சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது  திரையரங்குகளில் மறு வெளியீட்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முதலாக ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" (DDLJ) உள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் எனும் பெருமையை சிலம்பரசன்  நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது.






 இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் கடந்த நிலையில் இதனை ரசிகர்கள் இணையத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்..மேலும் சென்னையில் உள்ள மல்டிபிளஸ் திரையரங்கு ஒன்றில்  750 நாட்களுக்கு மேலாக இத்திரைப்படம் ஓடி கொண்டு இருக்கிறது. இன்றளவும் இத்திரைப்படம் இளைஞர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: 14 Years of VTV: காதலில் திளைத்த கார்த்திக் - ஜெஸ்ஸி.. விண்ணைத்தாண்டி வருவாயா ரிலீசாகி 14 வருஷமாச்சு!