மனித உறவுகளும் அவர்களுடனான இயல்பான வாழ்க்கை முறையையும் பற்றி பேசிய திரைப்படம் தான் 2014ம் ஆண்டு ராகவன் இயக்கத்தில், விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'மஞ்சப்பை' திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.  கிராமத்தில் இருந்து பேரனை பார்ப்பதற்காக சென்னை வருகிறார் தாத்தா. வந்த இடத்தில் அவர் எதிர்கொள்ளும் அனுபவங்கள் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் அவரை நகரத்தில் இருப்பவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பது தான் திரைக்கதையின் பின்னணி.


 




தாய் தந்தை இல்லாத பேரனை வளர்த்து ஆளாக்குகிறார் தாத்தா ராஜ்கிரண். அவரின் பேரனான விமல் சென்னையில் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவருக்கும் மருத்துவ படிப்பு படிக்கும் லட்சுமி மேனனுக்கும் இடையே காதல் மலர்கிறது. விமலுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருந்து அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் பேரனுடன் சில காலம் இருக்கலாம் என சென்னை வருகிறார் தாத்தா. 


தாத்தா மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட பேரன் அதிக அளவிலான நேரத்தை தாத்தாவுடன் செலவிடுகிறான். அதனால் காதலியுடன் சண்டை ஏற்படுகிறது. வெகுளித்தனமான தாத்தாவால் அமெரிக்க போகும் வாய்ப்பை பேரன் இழக்கிறான். தன்னுடைய இலட்சியத்தை கெடுத்த தாத்தா மீது அளவுக்கு கடந்த கோபம் வருகிறது.  அதனால் தாத்தாவை உதாசீனப்படுத்தி பேசிவிட தாத்தா வீட்டை விட்டு வெளியேறுகிறார். 


 



 


தொலைந்து போன தாத்தா திரும்பவும் கிடைத்தாரா? பேரன் விமலுக்கு அமெரிக்கா போகும் வாய்ப்பு கிடைத்ததா? தாத்தாவை விமலும், லட்சுமி மேனனும் புரிந்து கொண்டார்களா? இது தான் மஞ்சப்பை படத்தின் கிளைமாக்ஸ். ரகுநாதன்  இசையில் பாடல்கள் ஓரளவுக்கு சுமார் ரகம் தான் என்றாலும் இரண்டு பாடல்கள் மட்டும் சூப்பர் ஹிட் அடித்தது. குஞ்சு நைனா, தொந்தி படவா என ராஜ்கிரண் விமலை கொஞ்சும் டயலாக்கள் பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது.   


கிராமத்து மக்களின் எளிமையான இயல்பான வாழ்க்கை முறை, அப்பாவித்தனம் என கிராமிய மக்களுக்கே உரித்தான குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரமாக ராஜ்கிரண் நடித்திருந்தார். படத்தின் ஹீரோ விமல் என்றாலும் ரியல் ஹீரோ ராஜ்கிரண் தான். அத்தனை யதார்த்தமான நடிப்பால் பிச்சு உதறி இருப்பார். ஒவ்வொரு பேரனும் எதிர்பார்க்கும் ஒரு தாத்தாவாக ராஜ்கிரண் வாழ்ந்து இருந்தார். கிராமத்து மனிதர்களை நகரவாசிகள் புறக்கணிப்பதும் புரிந்து கொள்ளாமல் நடத்துவதையும்  இப்படம் பதிவு செய்தது. இப்படத்தின் மூலம் ஒரு கருத்தை ஜனரஞ்சகமாக பதிவு செய்த இப்படம் சிறிய  பட்ஜெட் படமாக இருந்தாலும் விமர்சனங்களையும் கடந்து நல்ல வரவேற்பை பெற்றது.