நீண்ட கால இடைவெளிக்கு பிறகு விமல் நடிப்பில் வெளியான முதல் வெப் தொடர் விலங்கு. கிரைம் த்ரில்லரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், ரேஷ்மா, மனோகர் மற்றும் பலர் நடித்திருந்தனர். எஸ்கேப் ஆர்ட்ஸ் மதன் தயாரிப்பில் , ஜி வி பிரகாஷின் பு ரூஸ்லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இந்த தொடரை இயக்கியுள்ளார். மொத்தம் 7 பாகங்களாக உருவாகியுள்ள விலங்கு தொடர் விமர்சன ரீதியா நல்ல பெயரை பெற்றுத்தந்தது. குறிப்பாக தொடரில் கிச்சா என்ற கதாபாத்திரத்தில் சினிமாவிற்குள் அறிமுகமாகியுள்ள ரவி என்பவருக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ” யாருய்யா நீ!... இவ்வளவு நாள் எங்க இருந்த ? “ என ரசிகர்கள் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வந்த சூழலில் , புரமோஷன் நிகழ்ச்சியில் தன்னை குறித்த விவரங்களை ஷேர் செய்திருக்கிறார் கிச்சா ரவி.




அதில் “ 1987 இல் சென்னையை நோக்கி வந்தேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக. அதன் பிறகு நிறைய ஸ்டூடியோ வாசலில் ஏறி இறங்கினேன் வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. ஆட்டோ எடுத்து ஓட்டினால் சினிமா கம்பெனிகளுக்கு போக வாய்ப்புகள் இருக்கும், வேறு வேலை செய்தால் விடுமுறை கிடைக்காது என நண்பர் சொன்னார். அதனால் ஆட்டோ ஓட்டினேன். யாரும் வாய்ப்புகள் கொடுக்கல. ஒரு வருடங்கள் கஷ்டப்பட்டேன். அதன் பிறகு எனக்கு வாய்ப்பு தேடி அலைவது கசப்பாகி போனது. ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம்னு வெளியே வந்துட்டேன். பிரசாந்த் ஒரு நாள் ஒரு ரோல் இருக்கு பண்ணுறீங்களா மாமானு கேட்டாரு.  அவரோட அக்கா வீட்டுக்காரர்தான் நான். நான் சரினு சொல்லிட்டேன். அவர் முதல் படம் புரூஸ்லில எனக்கு அட்மாஸ்ஃபியர்ல நிக்குற சீன்ல நடிக்க வச்சாரு. அப்போ எனக்கு கஷ்டமா இருந்துச்சு. என்னடா இவர் கூட நம்மல புரிஞ்சுக்கலனு. அதன் பிறகு விலங்கு படம் ஓக்கே சொன்னதும். திருச்சியில ஒரு வருடம் போய் தங்கியிருந்தோம். 5 கிலோ எடையை குறைக்க சொன்னாரு. பிரசாந்த் தினமும் டீ வாங்கிட்டு வர சொல்லுவாரு, சைக்கிள் வாங்கி கொடுத்து ஓட்ட சொன்னாரு. அடிக்கடி வேலை சொல்லிக்கிட்டே இருப்பாரு. டீ வாங்கிட்டு வர சொல்லும் பொழுது , மாமாவ ஏன் டீ வாங்கிட்டு வர சொல்லுறனு கேட்பாங்க. ஆனால் படத்துல இப்படித்தான் நடிக்கனும் உங்களுக்கு பொறுமை இருக்கானு செக் பண்ணேன்னு, இப்போ சொல்லுறாரு. அப்போ எனக்கு தெரியாது. படத்துல நிறைய அடி வாங்கியிருக்கேன். பாலசரவணன் அடிக்கும் போதெல்லாம் படாத இடமே இல்லை.  என்கிட்ட மாமா அடிக்க மாட்டாங்க இப்போனு சொல்லிட்டு. பாலசரவணன் கிட்ட அடிக்க சொல்லிடுவாரு பிரசாந்த். அடி வாங்குறப்போ ரொம்ப பயமா இருந்துச்சு“ என பகிர்ந்திருக்கிறார் கிச்சா ரவி .