சினிமாவில் பார்க்கும் காதல் கதைகளை ரசிகர்கள் தங்களோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளும் அளவிற்கு படங்களை எடுப்பதில் வித்தைக்காரர் இயக்குநர் விக்ரமன். ஒரு செடியில் ஒரு பூதான் பூக்கும் என அவர் சொன்ன ஒற்றை வசனம் இன்றைக்கும் பல ஒன் சைட் காதல்களின் தாரக மந்திரமாகவே இருக்கிறது எனலாம். கடந்த 1996 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்பம் இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பானால் நம்மில் எத்தனை பேர் இன்னும் அசையாமல் பார்த்துக்கொண்டிருப்போம். விஜய் வாழ்க்கையிலும் அந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்படம் உருவான விதம் குறித்து இயக்குநர் விக்ரம் டிஜிட்டல் சேனல் ஒன்றிற்கு விவரித்துள்ளார்.
இது குறித்து கூறிய அவர் “தயாரிப்பாளர் சௌத்திரி சாருக்கு முதல்ல கதை சொன்னேன்.. அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. யார் ஹீரோவா போடப்போறீங்க என கேட்டார். அப்போது பரிசீலனை செய்துக்கொண்டிருந்தோம். நிறைய பேர் நிறைய நடிகர்கள் பேரை சொன்னாலும் விஜயின் பெயரை யாருமே சொல்லவில்லை. இரண்டே சாட்டிலைட் சேனல்தான் அப்போது இருந்தது. அதில் ஒரு சேனலில் ஒருமுறை பாடல் போட்டுக்கொண்டிருந்தார்கள். அதில் சின்னப்பையன் சின்னப்பொண்ண காதலிச்சான் என்னும் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அதை விஜய் சொந்த குரலில் பாடியிருப்பார். நடனமெல்லாம் சூப்பரா ஆடியிருப்பார். அப்போதே நான் ஃபிக்ஸ் பண்ணிட்டேன். இவர்தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று. உடனே தயாரிப்பாளர் சௌத்ரி சாரிடம் சொன்னேன். அவர் தயங்கினார். சின்ன பையானா இருக்காரு, கொஞ்சம் மெச்சூரா இருந்தா நல்லா இருக்கும். கார்த்தி போல இருந்தா கரெக்டா இருக்குமே என்றார். ஆனால் நான் விஜய்தான் சரியாக இருப்பார் என்றேன்“ என்கிறார் விக்ரமன்.
இது குறித்து மேலும் பேசிய அவர் “விஜய்க்கு அப்போது 20 வயது இருக்கும். துரு துருனு டான்ஸ்லாம் ஆடுறாரு. இப்படியான சின்ன பையன் காதலை விட்டுக்கொடுத்தாதான் சிறப்பாக ஆடியன்ஸ் மனதில் பதியும் என தயாரிப்பாளரை ஒப்புக்கொள்ள வைத்தேன். என்னுடைய எதிர்பார்ப்பிற்கு மேல் விஜய் நடித்தார். பூவே உனக்காக நடிப்பதற்கு முன்னதாகவே ஒரிரு வருடங்களாகவே சில படங்களில் நடித்திருக்கிறார் விஜய். ஆனாலும் தமிழ் சினிமா ஏன் இவரை அடையாளம் காணவில்லை என எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு முறை டயலாக் சொன்னால் போதும் அந்த வேரியேஷனுக்கு ஏற்ற மாதிரியாக நடிப்பார். நல்லா நடனம் ஆடுவார். ஃபைட் பண்ணுவார். இப்படியான திறமைசாளியை அடையாளப்படுத்த நான் ஒரு தூண்டுகோலாக அமைந்தது செம ஹாப்பி.. படத்தை பார்த்த விஜயின் அப்பா அம்மா ரொம்ப நெகிழ்ந்துபோனாங்க. அது எல்லாம் நான் சொல்லிக்கொடுத்தது இல்லை. அவருடைய சொந்த முயற்சி எல்லாமே. நான் இயக்கிய படங்களிலேயே 270 நாட்கள் ஓடிய படம் இதுதான். விநியோகஸ்தர்கள் படம் 365 நாள் ஓடும் என சொன்னாங்க..இடையில் தீபாவளி பண்டிகை வந்ததால வேறு ஒரு படத்தை 100 நாள் ஓட்ட வேண்டி படத்தை தூக்கிட்டாங்க. இல்லைனா படம் ஒரு வருடம் ஓடியிருக்கும்” என்ற விக்ரமன் படம் குறித்த மற்றொரு சுவாரஸ்யத்தையும் பகிர்ந்திருக்கிறார். அதாவது பூவே உனக்காக திரைப்படம் முதலில் பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி எழுதியிருக்கிறார். அதாவது ஒரு இளம்பெண் தன் காதலை சாக்ரஃபைஸ் செய்து , தான் காதலித்த காதலனை , அவன் காதலியோடு சேர்த்து வைப்பது போல எழுதியிருந்ததாகவும் , பின்னர் அதனை மேல் வெர்சனாக மாற்றியதாகவும் விக்ரமன் கூறியுள்ளார்.