கேமராவை கொஞ்சம் கோணம் மாத்தி ட்ரை பண்ணா போதும், எதிர்தரப்பில் இருந்து முகத்திற்கு முன்னால் துருத்திக்கொண்டு வரும் கமெண்ட்.. ஆமா இவரு பெரிய பி.சி.ஸ்ரீராம் பாரு.. என்பதாகத்தான் இருக்க முடியும்.






தமிழ் சினிமாவிற்கு எத்தனையோ கேமாராமேன்கள் வந்துவிட்டார்கள்... ஆனால் இந்த கமெண்டை அழிக்கத்தான் இன்னும் இங்கு  ஒருவர் வரவில்லை.. அங்குதான் நிற்கிறார் அந்தக் கருப்பு கண்ணாடி மனிதர். தனது கண்கள் வழியே அன்று அவர் திரையில் வடித்த ஒளிக்கலவை, இன்றைய சினிமா கலைஞன் கண்களின் விழித்திரை வரை விரிந்து வைத்து கொண்டுதான் இருக்கிறது.. 




1956 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சென்னையில் பிறந்தார் பி.சி. குடியரசு தினத்தன்று பிறந்ததால் என்னுடைய பிறந்த நாளை நாடே கொண்டாடும் என்பாராம் பி.சி. பி.சியை அம்மா ஸ்ரீராமா என்றே அழைப்பார். சிறுவயது முதலே சினிமா மீது பெரும் காதல் கொண்ட பி.சி மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்தீர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். படிப்பில் அவ்வளவு கெட்டில்லை. ஆனால் பாஸாகி விடுவார். அதன் பின்னர் போட்டோகிராஃபி மீது காதல் வர, பல வருட போராட்டங்களுக்கு பிறகு, மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் இடம் கிடைத்தது. அங்கு தனது கல்லூரி படிப்பை முடித்தார்.




அன்றைய காலத்தில் கமல்ஹாசன், மணிரத்னம், இயக்குநர்கள் ஆர்.சி.சக்தி, ருத்ரய்யா, நடிகர்கள் ராதாரவி, சந்தான பாரதி ஆகியோர்தான் பி.சிக்கு சினிமா நண்பர்கள். ஒன்றாக ஹோட்டலில் கூடும் இவர்கள் சினிமா பற்றிய விஷயங்களை நிறைய பேசுவார்களாம். இந்த குருப்பிற்கு ‘சாம்கோ’ குருப் என்று பெயராம். கல்லூரி படிப்பை முடித்த  பின்னர், பி.சி,  ‘வா இந்த பக்கம்’ என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.




அதன் பின்னர் சிறு சிறு படங்களில் பணியாற்றிய பி.சி , மணி ரத்னத்துடன்  ‘மெளன ராகம்’ படத்தில் இணைந்தார்.  இந்தப் படம் இரண்டு பேருக்குமே கேரியர் பிரேக்கிங் படமாக அமைந்தது. படத்தில் காட்சிக்கு காட்சி மாயாஜாலம் நிகழ்த்திய பி.சி. கார்த்திக், ரேவதி தொடர்பான காட்சிகளை சன்லைட் வெளிச்சத்தில் காட்சிப்படுத்தியிருந்த விதம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.




இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி கமல் நடிப்பில் வெளியான  ‘நாயகன்’ படத்தில் இணைந்தது. காட்சிகளை இரத்தமும் சதையுமாக பின்னியிருந்த மணிரத்னத்திற்கு தனது கேமாரா கண்களால் பார்வை கொடுத்திருப்பார் பி.சி. மும்பையை காட்சி படுத்திருந்த விதமாகட்டும், கமலின் நடிப்பை தத்ரூபமாக எடுத்திருந்த விதமாகட்டும் எல்லாமே அபாராமாக இருந்தது.




இன்றைக்கும் அந்தப் படம் இளையதலைமுறையினருக்கு ஒரு பாடமாக இருந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து அக்னி நட்சத்திரத்தில் பணியாற்றிய பி.சி.. குள்ளன் கதாபாத்திரத்தில் கமல் நடித்த அபூர்வ ராகங்கள் படத்தில் இணைந்தார். கமலின்  கலைவெறி பிசியின் கேமாரா கண்களின் வழியே சாத்தியமானது.



அதன் பின்னர் கீதாஞ்சலி, இதயதாமரை, கோபுர வாசலிலே படத்தில் பணியாற்றிய அவர் மீண்டும் கமலுடன்  ‘தேவர் மகன்’ படத்தில் இணைந்தார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அடுத்த சிவாஜியாக கமலை காட்ட வேண்டும். மீசையுடன், வெள்ளை வேட்டியில், கமல் இருட்டில் பி.சியின் வெளிச்சத்திற்கு வந்த போது மொத்த திரையரங்கமும் கமலை சிவாஜியாக ஏற்றுக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.




இறுதிக்காட்சியில் ஜாதிய வன்மத்தால் கமலுக்கும் நாசருக்கும் இடையேயான சண்டையை அவ்வளவு தத்ரூபமாக காட்சிபடுத்திருப்பார் பி.சி. 




இதனிடையே விக்ரமை வைத்து மீரா படத்தை இயக்கினார். ஆனால் அது சரியாக போகவில்லை. இதனைத் தொடர்ந்து மணிரத்னத்துடன்  ‘திருடா திருடி’ படத்தில் இணைந்தார்.


அது பி.சியின் அடுத்த ஒளிக்கலவையின் உச்சமாக இருந்தது. சந்திரலேகா பாட்டில் ஏ.ஆர். ரஹ்மானின் மெட்டுக்கு தகுந்தவாறு லைட்டிங் செய்து அசத்திய அவர், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பாடலில் ஒளிகலவை குழைத்து மிரளவைத்திருப்பார்.


 




அதனைத் தொடர்ந்து மீண்டும் கமலை வைத்து குருதிப்புனல் படத்தை இயக்கி  இயக்குநர் அவதாரம் எடுத்தார்.




இன்று வரை சினிமா கலைஞர்களுக்கு படிப்பினையாக அமைந்திருக்கும் அந்தப்படம் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் நாமினேட் செய்யப்படவில்லை. அதனைத் தொடர்ந்து இயக்குநர் கதிருடன் இணைந்த பி.சி.ஸ்ரீராம் பாடல் காட்சிகளில் அடுத்த பிரம்மாண்டத்தை தொட்டார். 


இதனையடுத்து மணிரத்னத்துடன்  ‘அலைப்பாயுதே’ படத்தில் இணைந்த பிசியின் அத்தனை ஷாட்டுகளும் இன்றும் இளைய தலைமுறையினரை கொள்ளையடித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ரயில் சம்மந்தப்பட்ட காட்சிகள்,  பச்சை நிறமே பாடலில் அவர் செய்த மாயாஜாலம், எவனோ ஒருவன் பாடலில் காண்பித்த சோகம், சிநேகிதனே பாடலில் காண்பித்த அடர்த்தி என சொல்லிக்கொண்டே போகலாம்.


 




அதனைத் தொடர்ந்து விஜயுடன் குஷி, அஜித்துடன் முகவரி, வரலாறு என பணியாற்றிய பி.சி  சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு மீண்டும் ரெமோ படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து மணிரத்னத்துடன் ஓகே  கண்மணி இணைந்த அவர் ஷங்கருடன் முதன்முறையாக   ‘ஐ’ படத்தில் இணைந்தார். இந்தப்படத்தின் காட்சிகளில் பிராம்மாண்டத்தையும், பாடல்களில் ஒளிக்கலவையின் அடுத்த எல்லையையும் தொட்டிருப்பார்.


 



இதுமட்டுமல்லாமல் இந்தியில் பேட்மேன், ஷமிதாப், கி கா படத்திலும் பணியாற்றி அங்கும் தனது அடையாளத்தை பதிவு செய்தார். இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர கேமாரா மேன்களாக இருக்கும் நீரவ்ஷா, திரு, மறைந்த கே.வி.ஆனந்த், ஜீவா உள்ளிட்டோர் இவரது சிஷ்யர்களே.. இவர்கள் மூலம் தனது ஒளிவிதையை பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்கு கடத்திய பி.சிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..