விக்ரம் நடித்து துருவ நட்சத்திரம் படத்தைத் தொடர்ந்து தற்போது தங்கலான் படமும் நிலுவையில் இருப்பது ரசிகர்களை சோர்வடையச் செய்துள்ளது.


தங்கலான்


பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்  நடித்துள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தங்கலான் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் ஒத்திப் போக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


என்ன காரணம்


கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி தங்கலான் படம் ரிலீஸாக இருந்த நேரத்தில் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப் பட்டது. தங்கலான் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும்  படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் படத்தை வெளியிடுவதற்கு முன் நிறைய வேலைகள் இருப்பதாகவும் மேலும் இது ஒரு பெரிய படம் என்பதால் இந்தப் படம் எந்த படத்துடனும் இல்லாமல் தனியாக ஒரு ரிலீஸ் தேதி தேவைப்படுகிறது.


மேலும் தங்கலான் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை விரைவில் படக்குழு தொடங்க இருப்பதாக  தயாரிப்பாளர் தனஞ்சயன் முன்னதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், துபாய் , மலேசியா , சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ப்ரோமோஷன் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். படம் ஏப்ரலில் வெளியாவதற்கு இதுவே முதன்மையாக காரணம் என்று கூறப்பட்டது


தேர்தல் முடியும் வரை ஒத்திவைப்பு


தங்கலான் படத்திற்காக ஏப்ரல் மாதத்தை எதிர்பார்த்து மிக ஆர்வமாக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடையும் வகையில் தற்போது இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல்கள்  நடைபெற இருப்பதால் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை ஏப்ரல் மாத்தில் இருந்து இன்னும் சில மாதங்கள் தள்ளி ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் நேரத்தில் இப்படம் வெளியானால் அது பொதுமக்களின் கவனத்தை தேர்தலில் இருந்து திசைத் திருப்புவதாக அமையும் என்று படக்குழ் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் படக்குழு சார்பில் இருந்து தெரிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


அடுத்தடுத்து நிலுவையில் விக்ரம் படங்கள்


ஏற்கனவே கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் பல்வேறு சிக்கல்களால் ரிலீஸாகாமல் நிலுவையில் நிற்கிறது. துருவ நட்சத்திரம் படம் எப்போது ரிலீஸாகும் என்று எந்த விதமான உறுதியான தகவலும் வெளிவரவில்லை. இப்படியான நிலையில் தற்போது தங்கலான் படத்தின் ரிலீஸ் இரண்டாவது முறையாக தள்ளிப் போவது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.