மதயானைக் கூட்டம்


பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பனியாற்றிய விக்ரம் சுகுமாரன் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் வசனம் எழுதினார். இதனைத் தொடர்ந்து தனது முதல் படமான மதயானைக் கூட்டம் படத்தை இயக்கினார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்த படத்தை தயாரித்திருந்தார். என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்தார். கதிர் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். வேல ராமமூர்த்தி, ஓவியா, விஜி சந்திரசேகரன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானைக் கூட்டம் இன்றுடன் 10 ஆண்டுகளை கடந்துள்ளது.


கதை


ஆங்கிலத்தில் Ethnography என்று ஒரு சொல் இருக்கிறது. தமிழில் இனவரைவியல் என்று இந்த சொல் குறிப்பிடப் படுகிறது. ஒரு சமூகத்தில் இருக்கும் பல்வேறு இனக்குழுக்களில் ஒரு குறிப்பிட்ட இனத்தை , அதன் கலாச்சாரத்தை, பழக்கவழக்கங்களை ஆராய்வது இனவரைவியல் என்று சொல்லப்படுகிறது. 


மதயானைக் கூட்டம் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். இந்த சாதிய சமூகத்திற்குள் இருக்கும் மனிதர்களின் நம்பிக்கைகள், அவர்களின் சடங்குகள் அவர்களிடம் பகை ஆகியவற்றை  பின்னணியாக வைத்து ஒரு அழுத்தமான கதையை பின்னியிருக்கிறார் இயக்குநர்.


ஜெயக்கொடி என்கிற நிலச்சுவாந்தார், அவரது இரண்டு மனைவிகள் இவர்களின் மகன்கள் என ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் சம்பவங்களே இந்தப் படத்தின் கதை. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார் ஜெயக்கொடி . ஜெயக்கொடியின் முதல் மனைவி மற்றும் அவரது சகோதரன் வீராவுக்கு (வேல ராமமூர்த்தி) இது பிடிப்பதில்லை. ஜெயக்கொடியின் இரண்டாவது மனைவியின் மகனாக படத்தில் வருகிறார் கதாநாயகன் பார்த்திபன் (கதிர்). தனது அக்காவின் வாழ்க்கைக்கு பாதகாமாக இருக்கும் பார்த்திபன் குடும்பத்தின் மேல் எப்போதும் ஒரு வெறுப்புடன் இருக்கிறார் வீரா. திடீரென்று ஒரு நால் ஜெயக்கொடி இறந்துவிட அவரது இறுதிச் சடங்குகளுக்கு பார்த்தியை வரவிடாமல் தடுக்கிறார் வீரா. ஆனால் ஜெயக்கொடியின் மூத்த மகன் பார்த்தியை தனது வீட்டிற்கு அழைக்கிறார். இந்த சந்திப்பில் கைகலப்பு ஏற்பட தற்காப்புக்காக பார்த்தி தள்ளிவிட இறந்துவிடுகிறான் வீராவின் ஒரு மகன் . பார்த்திபன் தப்பிச் சென்று சிறிது காலம் கேரளாவில் சுற்றித் திரிகிறான். பார்த்திபனை கண்டுபிடித்து அவனை பழிவாங்குகிறான் வீரா.


வன்முறை என்கிற சடங்கு


மதயானைக் கூட்டத்தில் அடிக்கடி சடங்கின் காட்சிகள் இடம்பெறுகின்றன. திருமணம் , மரணம் என இந்த நிகழ்வில் கடைப்பிடிக்கும் பல்வேறு நுணுக்கமான காட்சிகள் காட்டப் படுகின்றன. படத்தில் கதாபாத்திரங்கள் அடிக்கடி தங்களது சாதிப் பெருமையைப் பேசிக் கொண்டே இருப்பதை  நாம் காணலாம். வீரம் என்பது அவர்களின் சாதிக்கே உரிய குணம் என்று இந்த கதாபாத்திரங்கள் நம்புகிறார்கள். சாதிப் பெருமை பேசும் ஒவ்வொரு குழுவும் தங்களது பெருமைகளை பேசு வன்முறைகளை தங்களுக்கு உள்ளாகவே தூண்டிவிட்டபடி இருக்கிறார்கள். இந்த கண்மூடித்தனமான வன்முறை இந்த சமூகத்தில் இருந்து ஓரளவிற்கு மனம் மாறி பார்த்திபனை தங்களில் ஒருவனாக இருக்க நினைக்கும் சிலரையும் எப்படி மாற்றுகின்றன என்பதை இந்தப் படத்தின் இறுதிக் காட்சி மிக அழுத்தமாக சொல்லப் பட்டிருந்தது.


சினிமா அல்லது எந்த ஒரு கலை வடிவமும் இந்த சமூகத்தில் எதார்த்தத்தில் இருக்கும் மனிதர்கள், கதைகளை மையப்படுத்தியே பிரதிபலிக்கின்றன. இந்த கதைகளை கையாளும் படைப்பாளி எந்த வித சார்பும் இல்லாமல் இந்த கதைகளில் இருந்து தன்னுடைய பார்வையை முன்வைக்கிறார். ஆனால் சாதியை மையப்படுத்தி வெளியாகும் பெரும்பாலான படங்களில் சமீபத்தில் வெளியாகிய மாமன்னன் படம் வரை , ஆதிக்க சாதியினர் தங்களது அடையாளத்தை மட்டுமே பெருமைக்குரிய ஒன்றாக எடுத்துக் கொள்கிறார்கள்.


மதயானைக் கூட்டம் திரைப்படம் அந்த படம் சித்தரித்த சமூகத்தினர் தங்களை எவ்வளவு பெருமையாக மார்தட்டி சுற்றினார்கள் என்பதை கண்கூடாக பார்த்தவன் நானும்தான். ஒரு நொடி படத்தின் டைட்டிலை சற்று கூர்ந்து கவனித்து பார்த்திருந்தார்கள் என்றால் இந்தப் படம் பெருமைப்படுவதற்கானது இல்லை என்று புரிந்திருக்கும்