2020ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி, ராஜ்குமார் பிச்சுமணி, இயக்குநர் ராம், ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஷாஜி சென் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சைக்கோ திரில்லர் ஜானரில் உருவான படம் 'சைக்கோ'. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தின் இசை பெரிய அளவில் பேசப்பட்டது. 


 



சைக்கோ படத்தில் இளையராஜாவின் இசை மற்றும் பின்னணி இசையை  கேட்ட இயக்குநர் மிஷ்கின்  கூறுகையில் "அவருடைய இசையை பற்றி இன்னும் நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என தோன்றுகிறது. அந்தளவுக்கு அவரின் இசை இப்படத்தில் மிக பிரமாதமாக இருந்தது" என கூறியிருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற உன்ன நினச்சு நினச்சு..., தாய் மடியில்.., நீங்க முடியுமா... என மூன்று பாடல்களுமே அந்த ஆண்டின் சிறந்த பாடல்களின் வரிசையில் நிச்சயமாக இடம்பெறும் அளவுக்கு மிகவும் அற்புதமாக அமைந்து இருந்தன.


அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்ட நேரக்காணல் ஒன்றில் 'சைக்கோ' படத்தில் இடம் பெற்ற உன்ன நினச்சு நினச்சு... பாடல் உருவான கதை பற்றின ஸ்வாரஸ்யமான தகவலை பகிர்ந்து இருந்தார். 


 



உன்ன நினச்சு பாடலுக்கு நிறைய டியூன்களை போட்டு வைத்து இருந்தார் இளையராஜா. அப்பா எனக்கு இன்னும் நல்லா வேணும், நீங்க எத்தனை போடுறீங்களோ போட்டு வையுங்க என சொன்னேன். இரண்டு மூணு நாளா அவரும் டியூன் போட்டுக்கிட்டே இருந்தார். அதுக்கு அப்புறம் அவர் ரொம்ப  கோபமாகிட்டார். பாடலின் வரிகளை பாடலாசிரியர் கபிலன் தான் எழுதி இருந்தார். அதை படித்து பார்த்துவிட்டு இது நல்லாவே இல்லை என தூக்கிபோட்டுட்டார். அடுத்த நாள் போய் பார்க்கும் போது அவரே பாடல் வரிகளை எழுதி வைத்திருந்தார். அதை நான் பார்த்துவிட்டு இது கேவலமா இருக்கு வேண்டவே வேண்டாம் என சொல்லிவிட்டேன். பிறகு மீண்டும் கபிலன் தான் பாடல் வரிகளை எழுதினார். 


 



ஒரு பையனின் பெயரை சொல்லி அந்த பையன் தான் பாட வேண்டும் என சொன்னார். நான் முடியாது சித் ஸ்ரீராம் தான் பாடணும் என உறுதியாக இருந்தேன். சித் ஸ்ரீராம் பாடினா அப்போ நான் வாய்ஸ் மிக்ஸிங் வரமாட்டேன் என சொல்லி விட்டார். நீங்க வரவே வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டேன்" என இளையராஜாவுடன் நடைபெற்ற அந்த ஸ்வாரஸ்யமான அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார் இயக்குநர் மிஷ்கின்.