கமல்ஹாசன் தவிர விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா ஆகியோர் நடித்துள்ள இந்த படம், ஜுன் 3ஆம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.
இந்நிலையில், வெற்றியை பிரம்மாண்டமாக படக்குழு கொண்டாடி வருகிறது. படத்தின் வெற்றியால் நல்ல லாபம் பார்த்துள்ள கமல், படகுழுவினருக்கு பரிசுகளை அள்ளித்தூவி வருகிறார். இயக்குநருக்கு கார், துணை இயக்குநர்களுக்கு பைக், சூரியாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் என சந்தோஷ குஷியில் இருக்கிறார் கமல்.
இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜும், நடிகர் கமல்ஹாசனும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். குறிப்பாக இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கமல் ஒரு புது மனிதராகவே இருந்தார். முகமெல்லாம் மகிழ்ச்சியாக நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோஷ கமலை பார்க்க முடிந்ததாக பலரும் கருத்து பதிவிட்டனர்.
செய்தியாளர் சந்திப்பின்போது, நடிகர் கமல்ஹாசனிடம், நிறைய வெற்றிப்படங்கள் உங்கள் நடிப்பில் வெளியாகிருக்கு. ஆனால் விக்ரம் படத்தை மட்டும் இவ்வளவு விமரிசையாக கொண்டாடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், என் நடிப்பில் நிறைய வெற்றிப்படங்கள் வந்திருப்பது உண்மைதான். ஆனால் அதை கொண்டாட எனக்கு கேப் கிடைக்கும். தற்போது பல்வேறு மொழிகளில் வெளியாகி அனைத்து இடங்களிலும் விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன் காரணமாகவே கொண்டாடி வருகிறோம் என்றார்.
தொடர்ந்து, இந்த படத்திற்கு மட்டும் கார், வாட்ச் எல்லாம் கொடுக்கிறீங்க. ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், வெற்றி படங்கள் நிறைய வந்திருக்கு. நான் அப்போதும் கலைஞர்களுக்கு செய்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் நீங்கள் கண்டுகொள்ளவில்லை. அதாவது வெளியில் தெரியவில்லை. இப்போது தும்முனா கூட செய்தி போடுறீங்க. அதனால் கார், வாட்ச் கொடுப்பது வெளியில் தெரிகிறது என்றார்.
மேலும், நடிகர் கமல்ஹாசனிடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க தயாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் தயார். அதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜிடமும் ரஜினியிடமும் கேட்க வேண்டும்” என பதிலளித்தார்.
தொடர்ச்சியாக, விக்ரம் குழந்தை நல்லபடியா இருக்கு. மக்கள் நீதி மய்ய குழந்தை எப்படி இருக்கு? என்ற கேள்விக்கு அதற்கு 5 வயது ஆகுது. நல்லா இருக்கு என்றும், வரும் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு போட்டியிடுவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இறுதியாக, மருதநாயகம், சபாஷ் நாயுடு வருமா? என்று செய்தியாளர்கள் கேள்விக்கு "வருவதற்காக வாய்ப்புகள் இருக்கு" ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பதில் அளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்