லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


லோகேஷ் கனகாரஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் பாஸில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் விக்ரம். இந்த படம் கடந்த ஜூன் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து திரையிடும் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. படம் வெளியாகி 25 நாள்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் திரையரங்கு நிறைந்த காட்சிகளாகவே உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவிலும் இத்திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.






வசூல் அளவிலும் இத்திரைப்படம் வெற்றிகரமாகவே இருப்பதாக திரை விமர்சகர்கள் கூறியுள்ளனர். இத்திரைப்படம் வெளியான 17 நாள்களிலேயே 155 கோடி ரூபாய் வசூலை எட்டியிருப்பதாகவும், பாகுபலி 2 செய்த சாதனையான 152 கோடி ரூபாய் வசூல் சாதனையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரம் முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் இன்னும் 4 முதல் 5 வாரங்களுக்கு திரையரங்குகளில் ஓடும் என்று கூறப்படும் நிலையில் 400 கோடி ரூபாய் வசூலை நோக்கி விக்ரம் திரைப்படம் சென்று கொண்டிருக்கிறது.






இந்த நிலையில், இத்திரைப்படம் எப்போது ஓடிடி தளங்களில் வெளியாகும் என்ற கேள்வி திரைபப்டம் வெளியானது முதலே எழுந்துவந்தது. திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தாலும் ஓடிடியிலும் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு, திரைப்படம் வெளியாகும் நாளையும் அறிவித்துள்ளது. படக்குழுவின் அறிவிப்பின்படி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூலை 8ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.



கமல்ஹாசன், ஃபகத்பாஸில், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இந்த க்ரைம் த்ரில்லர் வகை திரைப்படம் திரையரங்குகளில் செய்த வசூல் சாதனையைப் போலவே, ஓடிடி தளத்திலும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.