விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்கோடிப்பாக்கம் பகுதியில் திண்டிவனம் -புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் பூவரசன் பட்டதாரி இளைஞரான இவர் "மனிதநேயம்" என்கின்ற பெயரில் உணவு வழங்கி வருகிறார்.
இவர் கடையில் வைத்துள்ள பதாகையில் “அன்பை பரிமாறுவோம்” எனவும், உணவின் விலை உங்கள் விருப்பம் என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார். காலையில் இட்லி மற்றும் பொங்கல் போன்றவற்றை வழங்கிவருகிறார். மதிய வேளையில் லெமன், சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என மூன்று வகையான உணவு வழங்கி வருகிறார். இங்கு அதிகாலையில் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் வந்து உணவருந்தி விட்டு செல்கின்றனர். மேலும் "உணவின் விலை உங்கள் விருப்பம்" என்பதால் சாப்பிட்டு முடித்தவுடன் அருகில் வைத்துள்ள ஒரு பெட்டியில் அவர்களால் முடிந்த தொகையை அதில் செலுத்தி விட்டு செல்கின்றனர்.
இது தொடர்பாக பூவரசன் கூறுகையில்...
"நான் தனியார் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளேன். கொரோனா காலகட்டத்தில் பலர் உணவின்றி தவித்து வந்த நிலையில் நானும் வறுமையில் இருந்தேன். இதனால் இதுபோன்ற நிலை வரக் கூடாது எனவும் “பசி இல்லா தமிழகம்” ஆக இருக்க வேண்டும் என நினைத்து தற்பொழுது இப்பணியில் ஈடுபட்டு உள்ளேன். தினமும் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து நானும் என் தாயும் சேர்ந்து காலை உணவாக இட்லி மற்றும் பொங்கல் போன்றவற்றை தயார் செய்து ஏழு முப்பது மணி அளவில் கடையில் வைத்து விடுவோம்.
பின்னர் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பெரியவர்கள் வரை எங்கு உணவு அருந்திவிட்டு தங்களால் இயன்ற பணத்தை அங்கு உள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்வார்கள். மேலும் மதிய வேளையில் தயிர் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் என மூன்று வகையான உணவை மதிய வேளையில் வழங்கிவருகிறார். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1500 முதல் 2000 வரை செல்வதாகவும் தெரிவித்தார். வேலை முடிந்த பிறகு இரவு நேரத்தில் பகுதி நேர வேலைக்கு சென்று வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போதும் கூட பேருந்து நிலையம் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் உணவுக்காக கையேந்தும் நிலை உள்ளது இந்த நிலையை மாற்றவே என்னால் முயன்ற ஒரு முயற்சியாக இதனை முன்னெடுத்து நடத்தி வருகிறேன் என பெருமையுடன் தெரிவித்தார் பூவரசன். மேலும் பூவரசனின் இத்தகைய செயல் பொதுமக்களிடையே தற்போது மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது.