World Star கமல்ஹாசன், Trending Star விஜய் சேதுபதி, Malayalam Star ஃபகத் ஃபாசில் என மூன்று ஸ்டார்கள் சேர்ந்து கலக்கி இருக்கும் விக்ரம் படத்தோட பாடல்கள் நாளை ரிலீஸாகுது. இதற்காக, பிரம்மாண்ட விழா சென்னை ஜவகர்லால் நேரு அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கமலின் சொந்தபட நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
உலக நாயகன் கமலின் “பத்தல பத்தல” பாடல் ஏற்கெனவே சர்ச்சையை ஏற்படுத்தி, விக்ரம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், விக்ரம் படத்தின் வியாபாரமும் கிடுகிடுவென உயர்ந்துவிட்டதாம். இதுவரை இல்லாத அளவுக்கு, கேரளம், பாலிவுட் மார்க்கெட், dth, சேட்டிலைட் என அனைத்திலும் விக்ரம் படத்தின் ஒளிபரப்பு உரிமை விற்கப்பட்டுள்ளதாம். ஆனால், எவ்வளவு என்பது குறித்து மட்டும் அதிகாரப்பூர்வமாக யாரும் வாய திறக்கமாட்டேன் என்கிறார்கள்…
அரசியலில் முதல் நாயகனாக பார்த்தார். முடியவில்லை. ஆனால், தொடர்ந்து கற்றோரே திணறும் அறிக்கைகள் மூலமும், நேரடி கள நடவடிக்கைகள் மூலமும் அரசியலில் உயிர்ப்புடன் இருக்கிறார் கமல். இந்த நேரத்தில்தான், 3 ஆண்டுகள் கழித்து, கமல்ஹாசன் நடிக்கும் படம் என்பது எதிர்பார்ப்புகளைப் பன்மடங்கு கூட்டியுள்ளது. விக்ரம் படத்தில், முதல் பாடல் ரீலிசே, அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தி, தற்போது விவாதப் பொருளாக சமூக தளங்களில் மாறிவிட்டது.
இந்தப் படமும் 1986-ம் ஆண்டு வெளிவந்த கமலின் முதல் விக்ரம் படத்தின், இரண்டாவது பாகமா என்றால், அதுகுறித்து யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை.. அதில், கமல்ஹாசனுடன் டிம்பிள் கபாடியா, லிஸி, அம்பிகா என 3 ஹீரோயின்கள் இருந்தார்கள். அதுமட்டுமின்றி, பாலிவுட்டின் அம்ஜத்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார், வில்லனாக சத்யராஜ் நடித்து இருந்தார். முதல் விக்ரமில் 3 ஹீரோயின்கள், இந்த “நவீன கால” விக்ரமில் 3 ஹீரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் படத்தோட கதை குறித்து, அந்தப் படக்குழுவினருடன் “abp nadu” செய்திக்குழு பேசியதில் இருந்து ஒன்லைனர் மட்டும் கிடைத்துள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்தது போல், இந்தப் படத்திலும் கேங்ஸ்டராகத்தான் நடிக்கிறாராம். ஜெயிலுக்குள் செல்லும் விஜய் சேதுபதியை மீட்டெடுக்க, அந்த ஜெயிலுக்குள் ஃபகத் ஃபாசிலும் செல்கிறார், இவர்கள் இருவரின் அட்டகாசங்களையும் சதிகளையும் முறியடிப்பதற்காக, கமலும் அந்த ஜெயிலுக்குள் செல்கிறாராம். அதிலிருந்து, நடைபெறும் திடீர் திருப்பங்களும், இதுவரை கண்டிராத பயங்கர சண்டைக்காட்சிகளும், கண்கவர் பாடல்களும்தான் படமாம்.
அவுட் அன்ட் அவுட் ஆக்சன் த்ரில்லர் சினிமாவாக வந்திருக்கும் கமலின் விக்ரமில், சினிமாவின் சிறப்புகளுக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பஞ்சமிருக்காது என்பது மட்டும் நிச்சயம்.