புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு திருமணமான 10 மாதத்தில் அவரது கணவர் இறந்து விட்டார். இந்தநிலையில் அவர் அங்குள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். அப்போது இவருக்கும், அந்த கடைக்கு அருகே உள்ள காய்கறி மொத்த வியாபார கடையில் வேலைபார்த்து வந்த வடமங்கலம் பூஞ்சோலைக்குப்பத்தை சேர்ந்த மூர்த்தி மகன் ஜெயக்குமார் (வயது 24) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.




இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவருடன் ஜெயக்குமார்  உல்லாசம் அனுபவித்துள்ளார். அதனை தனது செல்போனில் அவர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த பெண் வலியுறுத்திய போது ஜெயக்குமார் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை பிரிந்து திருப்பூர் சென்று அங்கு ஒரு கம்பெனியில் அப் பெண் வேலைபார்த்து வந்துள்ளார்.


வேறு ஒருவருக்கு அவரை திருமணம் செய்து கொடுக்க அவரது வீட்டில் ஏற்பாடு செய்து வந்தனர். இதை தெரிந்து கொண்ட ஜெயக்குமார் அவ்வப்போது அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தன்னுடன் நெருக்கமாக இருந்த ஆபாச படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக தெரிகிறது. இதனால் பயந்து போன அந்த பெண் ரூ.18 ஆயிரம் வரை கொடுத்துள்ளார். மேலும் பணம் கேட்டு ஜெயக்குமார் மிரட்டியதால் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.



அவரை அவரது குடும்பத்தினர் காப்பாற்றி, விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். இதுபற்றி பெண்ணின் உறவினர்கள் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, அவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். போலீசுக்கு சென்றால் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இதற்கிடையே ஆபாச படங்களை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதை அறிந்த அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து வில்லியனூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.