லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் காம்பினேஷனில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'விக்ரம்'.
வசூல் வேட்டை நடத்தும் விக்ரம்
கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ்நாடு தாண்டி பல இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலில் இருந்து சினிமாவுக்குத் திரும்பியுள்ள கமல்ஹாசனின் இந்தப்படம், கோலிவுட்டில் சமீபத்தில் வெளியான மாஸ் ஹீரோக்களின் படங்கள் எதுவும் செய்யாத சாதனையை நிகழ்த்தி வருகிறது.
300 கோடி க்ளப்
மேலும் பல பரிச்சாத்த முயற்சிகளுடன் தொடர்ந்து கோலிவுட்டில் கதையம்சமுள்ள படங்களில் நடித்து வரும் கமல்ஹாசனின் திரையுலக வாழ்வில் வேறு எந்த படமும் நிகழ்த்திராத சாதனையாக விக்ரம் வசூலை வாரிக்குவித்து அவரது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோலிவுட் வரலாற்றில் இதுவரை 2.0 திரைப்படம் 508 கோடி ரூபாயும், எந்திரன் 218 கோடி ரூபாயும் அதிகபட்சமாக வசூலித்துள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து தற்போது அதிக வசூலை வாரிக்குவித்து வருகிறது.
விக்ரம் படம் வெளியாகி 11 நாள்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படம் உலகம் முழுவதும் 310 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
முன்னதாக இப்படம் வெளியான முதல் வாரமே 164 கோடி ரூபாய் வசூலைக் குவித்து கோலிவுட் வட்டாரத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதேபோல், பாகுபலி 2 மற்றும் KGF அத்தியாயம் 2 ஆகிய இரண்டு படங்களைத் தவிர மற்ற அனைத்துப் படங்களின் இரண்டாவது வார வசூலை விட விக்ரம் படம் பிடித்த வசூல் அதிகம்.
இந்நிலையில், 300 கோடி ரூபாய்க்கும் மேல் கலெக்ஷன் அள்ளிய 2.0, எந்திரன், கபாலி, பிகில் ஆகிய தமிழ் படங்களின் வரிசையில் விக்ரம் படம் இணைந்துள்ளது.
மேலும், தென்னிந்தியாவில் 300 கோடிகளுக்கு மேல் வசூலைக் குவித்த மாஸ் நடிகர்களான ரஜினிகாந்த், பிரபாஸ், விஜய், அல்லு அர்ஜூன், ராம் சரண், யாஷ் ஆகியோர் அடங்கிய பட்டியலில் நடிகர் கமல்ஹாசனும் இணைந்துள்ளார்.