அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த திரைப்படம் "கோப்ரா". பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் விக்ரம் பல வேடங்களில் நடித்த இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. இப்படத்தின் குழுவினர் படத்தின் விளம்பர பணிக்காக தென்னிந்திய முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு படத்தை மிகவும் பிரமாண்டமாக விளம்பர படுத்தினர். இவ்வளவு செய்தும் எதிர்பார்த்த அளவு படம் வெற்றியும் பெறவில்லை, வசூலையும் ஈட்டவில்லை, விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்வியை சந்தித்தது. 


சுத்த பிளாப் "கோப்ரா" : 


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அஜய் ஞானமுத்து. இவர் இயக்கத்தில் வெளியான டிமாண்டி காலனி மற்றும் இமைக்க நொடிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் 'கோப்ரா' திரைப்படத்தினை தயாரித்தார் லலித்குமார். இப்படத்தினில் விக்ரமின் ஜோடியாக கே.ஜி.ஃஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். இவர்களுடன் மிருணாளினி, ரோபோ ஷங்கர், மீனாட்சி, பூவையார், இர்பான் பதான், மியா ஜார்ஜ் மற்றும் ஆனந்த் ராஜ் என ஒரு பெரிய திரை பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தினை திரையரங்குகளில் வெளியிட்டது. இப்படி மிகுந்த பரபரப்பாக வெளியான திரைப்படம் கடைசியில் தோல்வியை சந்தித்ததில் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர் படக்குழுவினர். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த விக்ரம் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ஏமாற்றம். 


 







பல்டி அடித்த விக்ரம்:
 


அஜய் ஞானமுத்து இயக்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையில் இருந்த விக்ரமிற்கு இப்படம் தோல்வி அடைந்ததில் மிகுந்த வருத்தம். படத்தின் விளம்பர சமயத்திலேயே பல முறை நான் அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிப்பேன் என உறுதியளித்த விக்ரம் தற்போது பின்வாங்குகிறார். ஏற்கனவே அப்படத்திற்கான கதை, தயாரிப்பாளர் என அனைத்தும் தயாராக உள்ளது என கூறியவர் இப்போது ஜகா வாங்குகிறார். அதனால் தற்காலிகமா இப்படம் கைவிடப்பட்டதாக சினிமா  வட்டாரங்கள் கூறுகின்றன. 


 


இமேஜை தக்கவைக்க திட்டம்:


 


நடிகர் விக்ரம் தற்போது முழுக்க முழுக்க பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் விளம்பர பணிகளிலும், பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்திலும் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இயக்குனர் அஜய் ஞானமுத்து கோப்ரா படத்திற்காக பெரிய பட்ஜெட் செலவு செய்து தனது இமேஜை கெடுத்து கொண்டார் என்பதால் ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இயக்கி இழந்த இமேஜை மீட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.