பழம்பெரும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகரான விக்ரம் கோகலே இன்று காலமானார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 77 வயதான விக்ரம் கோகலே, நவம்பர் 5ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு புனே தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அவரின் இதயம், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகள் ஒன்றின் பின் ஒன்றாக செயலிழந்து வந்த நிலையில், நேற்று கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். வென்டிலேட்டர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.
தேசிய விருது பெற்ற நடிகர் :
பாரம்பரியமான திரை குடும்பத்தை சேர்ந்த விக்ரம் கோகலே மராத்தி நடிகராவார். மராத்தி மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் நடித்துள்ளார் விக்ரம் கோகலே, 2013ம் ஆண்டு 'Anumati' எனும் மராத்தி திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். ‘ஹம் தில் தே சுகே சனம்’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் தந்தையாக நடித்திருந்தார். இவரின் இழப்பு திரை ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் அவரின் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்னரே பரவிய வதந்தி :
விக்ரம் கோகலே இரண்டு தினங்களுக்கு முன்னரே காலமானதாக வதந்திகள் பரவின. ஆனால் அவரது மனைவி விருஷாலி மறுத்தார். அவர் வென்டிலேட்டரில் இருப்பதாகவும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் காலை பதிலளிப்பார்கள் என்றும் கூறப்பட்டது.
அவர் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டாலும் பின்னர் மோசமடைந்தது. ஏற்கனவே அவரின் சிறுநீரகம் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டதால் அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் போனது பின்னர்,அவரின் உயிர் பிரிந்தது. விக்ரம் கோகலேவின் இறுதி சடங்குகள் இன்று மாலை புனேவில் உள்ள வைகுந்த சுடுகாட்டில் நடைபெறும் எனும் தகவல் வெளியாகியுள்ளது.