நடிகர் விக்ரமின் கோப்ரா படம் பார்க்க லீவு கொடுக்குமாறு கல்லூரி மாணவர் எழுதியதாக கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் மகான் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் கோப்ரா படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
2 முறை படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போன நிலையில் தற்போது ஆகஸ்ட் 31 ஆம் தேதி கோப்ரா வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விக்ரம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாளை படமானது ரீலிசாக உள்ள நிலையில் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதேசமயம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை என்பதால் பல காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.
முன்னதாக படத்தின் விளம்பர பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டது. அந்த வகையில் திருச்சி, மதுரை, கோவை , கொச்சி,பெங்களூரு , ஹைதராபாத் என பல இடங்களுக்கும் சென்று ரசிகர்களை நேரில் சந்தித்தனர். தொடர்ந்து ஆகஸ்ட் 25 ஆம் தேதி கோப்ரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கோப்ரா படத்திற்கு லீவு கேட்டு கல்லூரி மாணவர் எழுதியதாக கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில் திருச்சியில் உள்ள பிரபல கல்லூரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் வணிகவியல் துறையைச் சார்ந்த எங்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி லீவு வேண்டும். விக்ரமின் கோப்ரா படம் பார்க்க உள்ளோம். படம் நாளை வெளியானாலும் முதல் நாளில் டிக்கெட் கிடைக்காததால் நாங்கள் செல்ல உள்ளோம். எங்களுக்கு போன், மெசெஜ் செய்ய முயற்சிக்காதீர்கள். நாங்கள் கண்டிப்பாக கல்லூரிக்கு வர மாட்டோம். இப்படிக்கு சீயான் விக்ரம் ரசிகர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பின்குறிப்பு என தெரிவித்து எங்களிடம் ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் உள்ளது. நீங்கள் விரும்பினால் எங்களுடன் இணைந்து படம் பார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இது விளையாட்டாக எழுதப்பட்ட கடிதம் போல தெரிந்தாலும் இக்கடிதம் இணையத்தில் வைரலாகியுள்ளது.