லைக்குகளை அள்ளும் ”லியோ புரோமோ”
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ், இரண்டாவது முறையாக இணையும் படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று அந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியாக, மாஸ் மற்றும் கிளாஸ் ஆக இருந்த விஜயின் காட்சிகள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த புரோமோ வெளியான 13 மணி நேரத்திலேயே 12 மில்லியன் அதாவது ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அதோடு 11 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
விக்ரம் படத்தின் தொடர்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படம், அவரது முந்தைய படங்களுடன் தொடர்பு கொண்ட எல்சியு-வில் தான் இடம்பெறும் என பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை உறுதி செய்யும் வகையில், கமலின் விக்ரம் படத்திற்கான டைட்டில் புரோமோவின் மாடலில் தான், லியோ படத்தின் டைட்டில் புரோமோவும் உள்ளது. அதிலும் காட்டுக்குள் இருக்கும் வீட்டில் தனியாக இருக்கும் கமலை தேடி போலீசார், அரசியல்வாதிகள் என பலரும் வருவார்கள்.
அதற்கு முன்பாக தயாராக துப்பாக்கி மற்றும் வாளை ரெடியாக ஆங்காங்காகே வைப்பார். பின்னர் அனைவருக்கும் சாப்பாடு போட்டு உபசரிக்கும் நிலையில் கோடாரி கொண்டு தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். லியோ புரோமோவிலோ, சாக்லேட் பேக்டரி ஒன்றில் தனியாக இருக்கும் விஜய்யை தேடி ஏராளமான கார்களில் பலரும் வருகிறார்கள். அதில் விக்ரம் படத்தில் இடம் பெற்ற முகமூடி அணிந்த கேரக்டர்கள் வருவது போலவும், அவர்களுடன் சண்டையிட விஜய் வாளுடன் தயாராக இருப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
கைதி படத்துடன் தொடர்பு?:
கைதி படத்தில் இடம்பெறும் ஒரு வசனத்தை வைத்து, அந்த படத்திற்கும் லியோ திரைப்படத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றன. அதன்படி, கைதி படத்தின் ஒரு காட்சியில், சிறையில் இருந்தபோது தான் பேக்கரியில் பணியாற்றியதாக கார்த்தி கூறியிருப்பார். இந்நிலையில், லியோ படத்தின் புரோமோவில் விஜய் பேக்கரி ஒன்றில் இருந்துகொண்டு தான் கத்தியை தயார் செய்து கொண்டிருப்பார். மேலும், இப்படத்தின் பூஜையில், கைதி படத்தில் நடித்து இருந்த மரியம் ஜார்ஜும் பங்கேற்றார். இதன் மூலம், கைதி படத்துடனான தொடர்பை லோகேஷ் கனகராஜ் மறைமுகமாக காட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காஷ்மீரில் படப்பிடிப்பு:
முன்னதாக காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோவை அதிகாரப்பூர்வமாக படக்குழு நேற்று வெளியிட்டது. “லியோ” என பெயரிடப்பட்டுள்ள விஜயின் அடுத்த படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியான நிலையில், லியோ படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 19 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அக்டோபர் 24 ஆம் தேதி திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை, மறுநாள் 25 ஆம் தேதி விஜயதசமி என விடுமுறை நாட்கள் வருகிறது. ஆக அக்டோபர் 19 தொடங்கி 24 ஆம் தேதி 6 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் அந்த நாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வசூலை அள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது. கண்டிப்பாக இந்த படமும் அதிகப்படியான வசூலை பெற்று சாதனைப் படைக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.