தமிழ் சினிமாவில் பல தலைமுறை நடிகர்களுடன் நடித்த அறிமுகமே தேவையில்லாத பெருமைக்குரிய நடிகர் விஜயகுமார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, வில்லனாக, ஹீரோவாக, குணச்சித்திர நடிகராக எண்ணற்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்தவர் விஜயகுமார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் ரீ என்ட்ரீ:
தமிழ் சினிமாவில் 'நாட்டாமை' என கம்பீரமாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த விஜயகுமார் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனது முத்திரையை திறம்பட படைத்தவர். சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களான வம்சம், தங்கம், நந்தினி என ஏராளமான மெகா தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடரான 'காத்திகை தீபம்' தொடரில் ராஜா சேதுபதி ஜாமீன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் விஜயகுமார். அவரின் என்ட்ரி குறித்த ப்ரமோ வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் சுவாரஸ்யமும் கூடியுள்ளது.
மிகவும் ஆவல்:
'கார்த்திகை தீபம்' சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜயகுமார் இது குறித்து பேசுகையில் "நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திகை தீபம் என்ற சூப்பர் ஹிட் தொடரில் இணைவதால் மிகவும் ஆவலாக இருக்கிறேன். இதன் மூலம் திரையுலகிற்கு மீண்டும் திரும்பியுள்ளேன். கார்த்திக் ராஜ் மற்றும் ஆர்த்திகாவுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி. அவர்களுடன் சேர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பதில் உற்சாகமடைகிறேன். என்னுடைய இந்த பயணத்திலும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்' என்றுள்ளார்.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது 'கார்த்திகை தீபம்' தொடர்.