விஜயகாந்துடன் (Vijayakanth) கடைசி வரை என்னால் இணைந்து நடிக்க முடியவில்லை என தனது வருத்தத்தை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார். 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் புரட்டி போட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வேறுபாடின்றி விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து அவர் உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தை கடைசியாக காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். 


இதனிடையே விஜயகாந்துக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் தமிழ் சினிமாவில் விஜயகாந்த் உச்ச நடிகராக இருந்த காலக்கட்டத்தில் பிரபலமாக திகழ்ந்த நடிகர் ராமராஜன், அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமராஜன், விஜயகாந்த் குறித்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 


அதாவது, “விஜி அண்ணா நடித்த 6,7 படங்களுக்கு உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். வசனம் நான் தான் எழுதி கொடுப்பேன். கேட்ட மாத்திரத்தில் ஒரே டேக்கில் கம்பீரமாக பேசி ஓகே பண்ணிருவாரு. அப்படிப்பட்ட மாபெரும் ஒரு ஹீரோ. சினிமா, நடிகர் சங்கம், அரசியல் என அனைத்திலும் உச்சம் தொட்டவர். எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த். ஏழை, எளிய மக்களுக்கு குறிப்பாக தாய்மார்களுக்கும், திரையுலக சார்ந்த கடைக்கோடி நபருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கக்கூடியதை நானே நேரடியாக பார்த்துள்ளேன்.


விஜயகாந்துடன் என்னால் இணைந்து நடிக்க முடியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சி தொண்டர்கள், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்லை தெரிவித்துக் கொள்கிறேன். சிங்கம் மாதிரி இருப்பார் விஜயகாந்த். அவருக்கு சண்டை காட்சிகள் என்றால் மிகவும் பிடிக்கும். புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு விஜயகாந்த் தான் சண்டை அருமையாக போடுவார். அவரை பார்த்து தான் நானே கற்றுக்கொண்டேன்.


விஜயகாந்த் மறைவை நம்பவே முடியவில்லை. இது தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் பேரிழப்பு. அவர் ஒரு லெஜண்ட். விஜி  அண்ணா நம்மை விட்டு மறைந்தாலும், இரண்டு விஜயகாந்தை தந்து விட்டு தான் சென்றுள்ளார். அவர்களின் இரு மகன்களும் விஜயகாந்த் புகழை கண்டிப்பாக பெருமளவு உயர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என ராமராஜன் கூறியுள்ளார். விஜயகாந்த் உடல் நல்லடக்கமானது இன்று மாலை 5 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Vijayakanth LIVE Update: விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழையின் மீது கைவைத்து கண்ணீர் விட்டார் விஜய்