தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார். அவரின் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் குறித்த தகவல் ஒன்று வெளியாகி அனைவரையும் கவலை அடைய செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகரும், இயக்குநருமான நடிகர் மாரிமுத்து மிகவும் ஆசை ஆசையாக வீடு ஒன்று கட்டி வந்த நிலையில் அதில் குடியேறாமலேயே காலமானார். அதே போன்ற ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் விஜயகாந்துக்கும் நிகழ்ந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் விஜயகாந்த், பூந்தமல்லி அடுத்து உள்ள காட்டுப்பாக்கத்தில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை 20,000 சதுர அடியில் கடந்த 2013ம் ஆண்டு முதல் கட்டி வருகிறார். சில ஆண்டு காலமாக கட்டுமான பணிகள் தேங்கிய நிலையில் சமீபத்தில் தான் அது தீவிரமடைந்து வேக வேகமாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 90% கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அந்த வீட்டில் பால் காய்ச்சும் நிகழ்வு நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு விஜயகாந்த் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை காரணமாக அவரால் வர முடியாமல் போனது.
அவர் அந்த வீட்டில் வசிக்க வேண்டும் என ஆசைப்பட்டதால் தீவிரமாக கட்டுமான பணிகள் நடைபெற்றது. ஆனால் இறுதியில் அவரின் ஆசை நிறைவேறுவதற்கு முன்னரே அவரின் உயிர் பிரிந்துவிட்டது. இந்த தகவல் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகர் மாரிமுத்து, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவர் அந்த வீட்டில் வசிக்க வேண்டும் என மிகவும் ஆசையுடன் வீடு கட்டிய நிலையில் அதில் குடியேறுவதற்கு முன்னரே அகால மரணம் அடைந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அதே போன்ற ஒரு சம்பவம் தற்போது மீண்டும் விஜயகாந்த் மூலம் நடைபெற்றுள்ளது வருத்தத்தை கொடுக்கிறது.