மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு கூட்டத்தை தாண்டி எகிறி குறித்து வந்து விஜய் ஆண்டனி அஞ்சலி செலுத்திய  சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது. 


உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நேற்று காலமானார். அவரது உடலானது நேற்று முழுவதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இருந்து விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் குவியும் கூட்டத்தை கருத்தில் கொண்டு அவரது உடலானது சென்னை தீவுத்திடலுக்கு தொண்டர்கள் படைசூழ கொண்டு செல்லப்பட்டது. இன்று மதியம் 1 மணி வரை பொதுமக்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேசமயம் நேற்று இரவில் விஜய், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் விஜய், உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழை மீது கைவைத்து கண்ணீர் சிந்திய காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. அதேசமயம் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூடியிருந்த கூட்டத்தினர் மத்தியில் பேரிகார்டை தாண்டி எகிறி குதித்து விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட இடத்துக்கு வந்தார். 






அங்கு உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழையில் முத்தம் கொடுத்து கண்ணீர் மல்க விஜயகாந்துக்கு பிரியாவிடை கொடுத்தார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் சினிமாவுக்கு வந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளேன். பல மனிதர்களை பார்த்துள்ளேன்.ஆனால் திரையிலும், நேரிலும் அச்சு அசல் ஒரே மாதிரியானவர் கேப்டன் விஜயகாந்த் தான். கேப்டன் ரொம்ப நல்லவர், தைரியமானவர்.


சிலருக்கு வாழ்க்கையில பணம், புகழ் எல்லாம் வந்துட்டுனு சொன்னா பணிவு கம்மியாகும். பொறுப்புணர்வு ரொம்ப கம்மியாகும். இவர் அப்படி எல்லாம் இல்லை. விஜயகாந்தின் மரியாதை படத்துக்கு நான் இசையமைத்தேன். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்களை ஒருங்கிணைக்கும் பணியை கூட விஜயகாந்த் மேற்கொண்டார். அவர் இன்றைக்கும் என்றைக்கும் நம் மனதில் இருந்துக் கொண்டே இருப்பார்” என தெரிவித்தார். 




மேலும் படிக்க: Vijayakanth LIVE Update: விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழையின் மீது கைவைத்து கண்ணீர் விட்டார் விஜய்