புதுக்கோட்டையை அடுத்த நமணசமுத்திரத்தில் நடந்த சாலை விபத்தில் பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடையில் அமர்ந்திருந்த பக்தர்கள் மீது சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 


விபத்தில் காயமடைந்த 19 பேர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


என்ன நடந்தது..? முழு விவரம்: 


புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் பகுதியில் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் காவல் நிலையம் உள்ள நிலையில், இதற்கு நேர் எதிரே ஐய்யங்கார் என்ற பெயரில் தேநீர் மற்றும் பேக்கரி கடை இருந்துள்ளது. இங்கு அப்பகுதியில் உள்ள மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி டீ, காபி அருந்துவர். இந்த சூழலில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓம் சக்தி கோயில் பக்தர்கள் 16 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்திற்கு ஒரு வேனிலும், சென்னை‌யில் இருந்து பிள்ளையார்பட்டி நோக்கி சென்ற 22 ஐயப்ப பக்தர்கள் ஒரு வேனிலும், திருக்கடையூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு காரில் சென்ற ஆறு பேர் ஆகியோர் அந்த பேக்கரியில் வாகனங்களை நிறுத்தி தேநீர் அருந்தி கொண்டிருந்துள்ளனர்.


இந்தநிலையில் அரியலூரிலிருந்து சிவகங்கைக்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியின் ஓட்டுனர் மணிகண்டன் வாகனத்தை இயக்கி வந்துள்ளார். அப்போது மணிகண்டன் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் பேக்கரி கடையில் டீ, காபி அருந்தி கொண்டிருந்த நபர்கள் மீதும், சாலையோரம் நின்று கொண்டிருந்த இரண்டு வேன் மற்றும் ஒரு காரில் அமர்ந்திருந்த நபர்கள் மீதும் அதிவேகமாக ஈச்சர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதான சாந்தி, 60 வயதான ஜெகனாதன், ஐயப்ப பக்தர்களான மதுரவாயலைச் சேர்ந்த 34 வயதான சுரேஷ்,‌ சென்னையைச் சேர்ந்த 25 வயதான சதீஷ், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான கோகுலகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், லாரி மோதியதில் லாரிக்கு அடியில் நான்கு பேர் சிக்கிய நிலையில் தீயணைப்பு துறையினரும் காவல்துறையினரும் நீண்ட நேரம் போராடி லாரிக்கு அடியில் சிக்கிய நான்கு பேரின் சடலத்தை ஜேசிபி கிரேன் மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றின் உதவியுடன் மீட்டனர். தொடர்ந்து,  விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடலையும் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த விபத்தில் காயம் அடைந்த 3 வயது சிறுமி உட்பட 19 நபர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையிலான நமணசமுத்திரம் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் இந்த விபத்துக்கு காரணமாக இருந்த சிமெண்ட் லாரி ஓட்டுனர் மணிகண்டன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.