தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர். 


உடல்நிலை பாதிப்பு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்  நேற்று உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்குகள் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் சென்றனர். விஜயகாந்த் யாராலும் வெறுக்க முடியாத ஒரு அன்பான மனிதர் என்பது நாம் வார்த்தைகளால் கேள்விப்பட்டு வியந்தது. அவரை காண கூடிய இந்த மக்கள் கூட்டம் தான் இத்தனை ஆண்டு காலத்தில் அவர் சம்பாதித்த உண்மையான சொத்து என மக்கள் கண்கலங்கியபடி கூறி வருகின்றனர். 






இப்படியான நிலையில் இணையத்தில் விஜயகாந்த் நடித்த படங்களின் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ரமணா படத்தில் கடைசியில் அவர் இறந்து போவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேச விரும்பும் விஜயகாந்த் தனது பேச்சில், ‘என் மரணத்திற்கு பிறகு பஸ் எரிப்பதோ, கடையை எரிப்பதோ இருக்கக்கூடாது. அப்படி பண்ண அரசியல் கட்சிகளுக்கும், மாணவர் சக்திக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். எனக்காக ஒரு தீக்குச்சி கூட எரியக்கூடாது. எரியுற நெருப்பு உங்க மனசுக்குள்ள மட்டும் தான் இருக்கணும்' என வசனம் பேசியிருப்பார். 






இதனிடையே நேற்று அஞ்சலி செலுத்த வந்த தொண்டர் ஒருவர் பேசும் போது, ‘வழக்கமாக செக்கப் போகிறார் என்று தான் நினைத்தோம். எத்தனையோ முறை போய் வந்திருக்கிறார். ஆனால் இப்படி ஆகும் என நினைக்கவில்லை. எங்களால் தாங்க முடியவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கேப்டன் தொண்டர்கள் என்ற காரணத்தால் தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் உள்ளது. அவரு எங்களை ஒழுக்கமாக வளர்த்துள்ளார். தேமுதிக காரன் எங்கேயும் ரவுடியிசம் பண்ண மாட்டார். எந்த கெட்ட விஷயத்துக்கும் போக மாட்டான். காரணம் கேப்டன் மட்டும் தான்’ என கூறியுள்ளார். 




மேலும் படிக்க: Vijayakanth LIVE Update: விஜயகாந்தை காண தீவுத்திடலில் அணிவகுத்து நிற்கும் பொதுமக்கள் - பிரபலங்களும் கண்ணீர் மல்க அஞ்சலி