மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு (Vijayakanth) அஞ்சலி செலுத்தும் வகையில் இயக்குநர் மிஷ்கின் பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 


உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தை கடைசியாக காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது. 


இதனைத் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்ததால் பாதுகாப்பு கருதி விஜயகாந்த் உடலானது சென்னை தீவுத்திடலுக்கு இன்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அங்கேயும் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் வந்திருக்கும் பொதுமக்களுக்கு தேவையான ஏற்பாடுகளும் சென்னை மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது மதியம் 1 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் விஜயகாந்த் உடல் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாலை 4.45 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 


விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத பிரபலங்கள் வீடியோ வாயிலாகவும், சமூக வலைத்தள பதிவு மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று அவரது உடலானது முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின்  விஜயகாந்த் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 






அதில்,  “ஒரு அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில், தமிழர்களின் மனதில் ஒரு பெரும் ஆலமரமாக ஓங்கி வளர்ந்து நிழற் கொடுத்து, கனி கொடுத்து, அருள் கொடுத்து, அன்பு கொடுத்து, இன்று இந்த மண்ணிலே சாய்ந்து விட்டீர்களே ஐயா! - நீங்கள் சாய்ந்தாலும் இந்த பூமி தவம் என உங்களை சுமக்கும். உங்கள் வேர்கள் எங்கள் இதயங்களில் பயணிக்கும். நீங்கள் விட்டுச் சென்ற விழுதுகள் இந்த பூமியில் மரங்களாய் வளரும். சொர்க்கம் என்ற ஒன்று இருந்தால் அங்கே உங்களுக்காக ஒரு மாளிகை திறந்திருக்கும். ஓய்வெடுங்கள் ஐயா. என்றும் சிரித்த உங்கள் கன்னங்களில் நான் முத்தமிடுகிறேன்” - அன்புடன் மிஷ்கின் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க: Vijayakanth LIVE Update: தீவுத்திடல் விஜயகாந்த் உடல்.. விடிய விடிய அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்