தாய்லாந்தில் உள்ள  இலங்கை முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச அதிக செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அவர்  கூடிய விரைவில் நாடு திரும்ப காத்திருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கோத்தபாய ராஜபக்ச 24 ஆம் தேதி இலங்கை வருவதாக கூறியிருந்த நிலையில் அவரது பயணம் தள்ளிப்போடப்பட்டிருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு குறைபாடுகள்  இருப்பதாக கூறி அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.


கோத்தபாய ராஜபக்ச இலங்கை வருவதற்கு விருப்பத்துடன் இருப்பதாகவும் ,ஆனால் அவரின் பாதுகாப்பே முக்கிய பிரச்சினை எனவும், அவர் நாடு திரும்பும் திட்டத்தை சற்று தள்ளி வைக்குமாறு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளதாக இலங்கை அரசு அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு கூறியுள்ளார்.


இலங்கையில் கோத்தபாய ராஜபக்சவுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டால் அவர் மிக விரைவில் நாடு திரும்புவார் என அதிகாரி தெரிவித்திருக்கிறார். அதேபோல் தாய்லாந்தில் செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்வதால் நாடு திரும்புவதை விரைவுப்படுத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


தற்போது தாய்லாந்தில் கோத்தபாய ராஜபக்சவின் செலவு பட்டியல் நூற்றுக்கணக்கான மில்லியன்களை கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


 தனியார் ஜெட், அதிபர் தங்குவதற்கான சகல வசதிகளும் உடைய அறை, எந்த நேரத்திலும் பாதுகாப்பு என அனைத்திற்கும் அதிக செலவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 


இந்த செலவுகள் அவரது தனிப்பட்ட செலவா அல்லது இலங்கை அரசாங்கத்தின் செலவா அல்லது அவரது உறவினர்கள் செலவு செய்கிறார்களா என தகவல் ஏதும் வெளியாகவில்லை.


 இந்நிலையில் கோத்தபாயவின் நெருக்கமான அவரது சில ஆதரவாளர்களால் இந்த செலவுகள் ஏற்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதேவேளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் சென்று வந்த பின்னரே கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்ப  தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் 90 நாள் விசாவில் தாய்லாந்தில் தங்கி இருக்கும் கோத்தபாய ராஜபக்ச வரும் செப்டம்பர் மாதம் இலங்கை வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருந்த போதிலும் அவர் 90 நாள் விசாவில் இருப்பதால் 90 நாட்கள் முடியும் தருவாயில் இலங்கை திரும்பலாம் எனவும் கூறப்படுகிறது.


முன்னதாக கோத்தாபய ராஜபக்சவின் வருகையினை ஒட்டியே அவரது மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தாய்லாந்து தங்கியுள்ள கோத்தபாய  ராஜபக்சவுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள், அறிவுறுத்தியுள்ளனர்.


இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் சிறப்பு பாதுகாப்புடன் தேவையான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வழியாக உள்ளது.


இது ஒரு பக்கம் இருக்க ,கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கா செல்லும் நடவடிக்கைகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். அவருக்கு அங்கு கிரீன் கார்ட் விசா வாங்குவது தொடர்பாக வழக்கறிஞர்கள்  ஈடுபட்டிருப்பதாகவே தகவல் வெளியாகியிருக்கிறது.
 கோத்தாபய ராஜபக்ச மீண்டும் இலங்கை வருவாரா அல்லது தாய்லாந்தில் இருந்து நேரடியாக அமெரிக்க செல்வாரா என்பதை  பொறுத்திருந்து  தான் பார்க்க வேண்டும்.