திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என திரைத்துறையில் பலவிதமாக பணியாற்றி வரும் பிரபலம் எஸ் ஏ சந்திரசேகர். இவர் 1978-ஆம் ஆண்டு "அவள் ஒரு பச்சை குழந்தை" என்னும் தமிழ் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் திரையில் அறிமுகமானவர். பின்னர் தனது படைப்புகளில் பல வித்தியாச காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் ரசிகர்களை கவரந்த இவர், தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். இவர் தளபதி விஜயின் தந்தை என்பது நாம் அனைவரும் அறிந்தது. இவர் குறுகிய காலகட்டங்களில் நிறைய படங்கள் இயக்கியவர் என்ற பெருமை உள்ள இயக்குனர். 80களின் சமயத்தில் வருடத்திற்கு நான்கு ஐந்து திரைப்படங்கள் வெளிவந்தன. அதற்கு அவரிடம் வேலை செய்த அசிஸ்டண்டுகளை முக்கிய காரணமாக சொல்வார்கள். அதனால் அவரது அசிஸ்டண்ட்கள் மூன்று பேரை அழைத்து இவர்களுடைய அனுபவங்களை பற்றி பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சியை ஜெயா டிவி ஒருங்கிணைத்து இருந்தது. 



அந்த நிகழ்ச்சியில், "அப்போது ராதிகா, விஜயகாந்த் நடித்த 'நீதியின் மறுபக்கம்' திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து மேட்டுப்பாளையத்தில் தங்கியிருந்தோம். எப்போதும் ஷூட்டிங்கின் போது பகல் நேரத்தில் அவர்களை பயங்கரமாக வேலை வாங்கிக்கொண்டிருப்பேன், திட்டிக்கொண்டிருப்பேன். ஏன்னா 81ல இயக்குனர் ஆகுறேன், 90ல 55 படம் இயக்கிவிட்டேன். சராசரியாக வருடத்திற்கு 5,6 படங்கள் இயக்குவேன், அதற்கெல்லாம் காரணம் இவங்கதான். இவங்கள அப்படி வேலை வாங்கித்தான் அவ்வளவு படங்கள் சாத்தியம் ஆனது. அப்படி இருக்கும்போது சாயும்காலம் ஆனால் கொஞ்சம் ஜாலியா இருப்போம். ஜாலின்னா நீங்க புரிஞ்சிக்கணும்…(மது பார்ட்டி) அப்போ விஜயகாந்த் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கலாட்டா பண்ணுவாரு. ஷூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் உள்ள ஒரு வாழ்க்கை எங்களுக்கெல்லாம் ரொம்ப ஜாலியா இருக்கும். இதுல செந்தில(உதவி இயக்குனர்) ரொம்ப திட்டுவேன், அதை எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு, அன்னைக்கு இரவு கொஞ்சம் அதிகமா போயிடுச்சு… அதிகமானதும் விஜயகாந்த் அவரிடம் கேட்கிறார், 'எப்புட்றா இவர்ட்ட வேலை செய்யுற?'ன்னு… அப்போது செந்தில் என்னை திட்ட ஆரம்பிக்கிறார், அதில் இல்லாத கெட்டவார்த்தை இல்லை. 'அவன் கெடக்குறான் ஒருத்தன்… ஒருநாள் நான் டைரக்டர் ஆகி, அவன அசிஸ்டண்டா வச்சு நான் வங்குறேன்டா வேலை' ன்னு என்னென்னமோ வார்த்தைகள் எல்லாம் பேசுகிறார். அந்த வார்த்தைகள் எல்லாம் சொல்ல கூடாது, சென்சார் ஆகிடும்…" என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.



மேலும் பேசுகையில், "அவர் அப்போது பேசியதை எல்லாம் சிறிய விடியோ கேமரா வைத்து விடியோ எடுத்துவிட்டோம். அடுத்தநாள் ஷூட்டிங், மானிட்டர் வருது, விஜயகாந்த் என்ன பண்ராருன்னா, அந்த மானிட்டர்ல முன்னாடி நாள் எடுத்த கேசட்ட போட்றாரு. போட்டுட்டு, செந்தில் இங்க வா, இப்படிதான் இந்த பாட்டு ஷூட் பண்ண போறோம், இத பாத்துக்கன்னு கூப்புடறாரு. அவர் வந்ததும் எல்லாரும் சேர்ந்து அவர் தோளை பிடிச்சு அழுத்தி உக்கார வைக்குறோம். உக்கார வச்சா விடியோ ஆரம்பிக்குது, செந்தில் அய்யோ அய்யோ ன்னு கத்துறார். அப்படி ஒரு நட்பு முறையில் தான் நாங்கள் பழகினோம், அப்படிதான் இவ்வளவு திரைப்படங்கள் செய்தோம். அவர் மீது கோபம் எதுவும் வரவில்லை, அது அந்த மூட்ல பேசுனது அவ்வளவுதான்" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.