நான் அப்பாவிடம் தினமும் பேசிக்கொண்டிருக்கிறேன் என முதிகமறைந்த தே தலைவர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன்  நிகழ்ச்சி ஒன்றில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். 


நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்தாண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது மறைவு இன்றளவும் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அனைவரிடத்திலும் விஜயகாந்த் நன்மதிப்பை பெற்றிருந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.தினமும் பல்வேறு ஊர்களிலும் இருந்தும் மக்கள் அவரது நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். 


இதனிடையே விஜயகாந்துக்கு பிறகு தேமுதிக கட்சியின் நடவடிக்கைகளும் மக்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் கேப்டனின் நினைவிடம் வரும் மக்களுக்கு அக்கட்சி சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் விஜய பிரபாகரன் நிகழ்ச்சி ஒன்றில் அப்பா விஜயகாந்த் பற்றி நெகிழ்ச்சியான பல கருத்துகளை தெரிவித்துள்ளார். அதாவது, “நான் அப்பாவிடம் தினமும் பேசிக்கொண்டிருக்கிறேன். கேப்டனுக்கு எல்லாமே தெரியும்.  


கடவுள் தூணிலும், துரும்பிலும் இருப்பதாக சொல்லும்போதெல்லாம் எனக்கு புரியவில்லை. ஆனால் இப்போது உணர்கிறேன். நான் சோர்ந்து இருந்தாலும், எங்கு பார்த்தாலும் அப்பா தான் தெரிகிறார். மூச்சிலும், அசைவிலும் கேப்டன் என்னை சுற்றி தான் இருக்கிறார். நிச்சயம் விஜயகாந்தை யாரெல்லாம் ரசிக்கிறீர்களோ அவர்களுக்கெல்லாம் அவரின் ஆசீர்வாதம் கிடைக்கும். 


இங்கு இருக்கும் இளைஞர்களுக்கு சகோதரராக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு சின்ன சின்ன கோபங்கள் வரலாம். எதற்காகவும் பெற்றோர்களை வெறுக்காதீர்கள். அவர்கள் இல்லாதபோது தான் அந்த வலி என்ன என்பது புரியும். இன்னைக்கும் நான் ஒரு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றால் எங்க அப்பா விஜயகாந்தின் கனவை நிறைவேற்ற தான் இங்கு வந்து உங்கள் முன் நிற்கிறேன். 


அரசியல் தாண்டி மக்களுக்கு அப்பா என்ன செய்தாரோ, அது  என் மூலமாகவும், சண்முகப்பாண்டியன் மூலமாகவும் செய்யப்படும். அப்பா ஆக்டிவ் ஆக இருந்து ரொம்ப வருஷமாச்சு. அவருக்கு உடம்பு சரியில்லை என 4 வருடங்களுக்கு முன்னால் ஊடகங்களில் செய்திகள் வந்ததை பற்றி சொன்னேன். அதை கேட்டவுடன சட்டென எழுந்து அங்கிருந்த சைக்கிளிங் மிஷினில் ஏறி அரைமணி நேரம் மிதித்து தான் எப்படிப்பட்ட உடல்நிலையில் இருக்கிறேன் என்பதை காட்டினார். தன்னால் முடியவில்லை என்றாலும் கடைசி வரை போராடுபவர் விஜயகாந்த். அதுதான் கேப்டன்” என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க:  Watch Video: காஜல் அகர்வாலிடம் முறைகேடாக நடந்துகொண்ட ரசிகர்.. வலுக்கும் கண்டனம்.. வீடியோ!