PM Modi TN Visit: மீண்டும் மீண்டுமா..! மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - திட்டங்கள் என்ன?

PM Modi TN Visit: பிரதமர் மோடி மார்ச் மாத இறுதியில் மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

PM Modi TN Visit:  நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி தமிழகம் வந்து, தென்மாவட்டங்களில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி தான் சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, நடப்பாண்டில் 3 மாதங்களில் 5வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அடுத்தடுத்து பிரதமர் மோடி தமிழ்நாடு வருவது, பாஜக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதோடு, இந்த தேர்தலில் எப்படியும் தமிழ்நாட்டில் இருந்து பாஜகவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிட அக்கட்சி மிகுந்த தீவிரம் காட்டுவதையும், பிரதமர் மோடியின் வருகை உணர்த்துகிறது.

Continues below advertisement

2024ல் பிரதமர் மோடியின் தமிழக பயண விவரங்கள்:

  • கடந்த ஜனவரி 3ம் தேதி நடைபெற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அதோடு, திருச்சி விமான நிலையத்தின்  இரண்டாவது முனையத்தையும் திறந்து வைத்தார்.
  • கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி நடைபெற்ற கேலே இந்தியா இளைஞர் விளையாட்டின் தொடக்க விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அதோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சென்றும் இறைவழிபாடு நடத்தினார்.
  • கடந்த மாதம் 27ம் தேதி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். அப்போது பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதோடு, குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
  • இறுதியாக, கடந்த 4ம் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். 

இந்நிலையில் நடப்பாண்டில் 5வது முறையாக வரும் மார்ச் 22ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக:

அதிமுக கூட்டணியில் இருந்து தேர்தல்களை எதிர்கொண்டு வந்த பாஜக, தற்போது தனியாக பிரிந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. இதன் காரணமாக தனது தலைமையில் புதியதாக கூட்டணியை கட்டமைத்து வருகிறது. அதில் தற்போது வரை புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனாநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. அதேநேரம், மீண்டும் அதிமுக உடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாகவும், அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பாமக மற்றும் தேமுதிக உடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Continues below advertisement