தமிழ் சினிமாவில் கருப்பு தங்கம், தன்னிகரில்லா நடிகர் என கேப்டன் விஜயகாந்த் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். அரசியலில் அவரின் ஈடுபாடு அதிகமாக இருந்த காரணத்தினால் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
கேப்டன் விஜயகாந்த்:
அரசியலில் மிகுந்த செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக தேமுதிக கட்சியின் தலைவராக மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஆனால் அவரின் உடல் நிலை அவருக்கு சரியாக ஒத்துழைக்காத காரணத்தினால் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் கலங்க வைத்தது. திரையுலகத்திற்கும் அவரின் தொண்டர்களுக்கும் மிக பெரிய இழப்பாக அமைந்தது.

நிலைகுலைந்து போன நடிகர் விஜயகாந்தின் குடும்பத்தினர் அவரின் வழிகாட்டுதலின்படி தேமுதிகவை வழிநடத்தி வருகிறார்கள். விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுள்ளார்.
விஜயகாந்த் மகன் உருக்கம்:
இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு அவரின் தந்தையை நினைத்து உருக்கமான போஸ்ட் ஒன்றை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பா விஜயகாந்த் மற்றும் குழந்தையாக இருக்கும் தம்பி சண்முக பாண்டியனுடனும் எடுத்துக்கொண்ட பிளாஷ்பேக் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
என் கண்களில் கண்ணீருடன் நான் இந்தப் படத்தை தந்தையர் தினத்தில் வைக்கிறேன்... ஒவ்வொரு தந்தையர் தினத்திலும் நான் என் அப்பாவிடம் ஆசிர்வாதம் பெறுவேன். ஆனால் இந்த ஆண்டு அவர் எங்களுடன் இல்லை. என் தந்தையின் இழப்பு என்னை எப்போதும் வாட்டும்.
ஆனால் இப்போது, நான் செய்யும் அனைத்தும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவரது வாழ்க்கையை கொண்டாட வைக்கும் வகையிலும் இருக்கும். அவரது பார்வையை, கனவை நோக்கி நான் அணிவகுத்து செல்கிறேன். எத்தனை தடைகள் வந்தாலும் அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்" என மிகவும் உருக்கமான குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
விஜய பிரபாகரனின் இந்தப் பதிவுக்கு "அவரின் ஆசீர்வாதம் உங்களுடன் என்றும் இருக்கும். உங்களை சுற்றி தான் அவர் எப்போதுமே இருப்பார்" என ஆறுதலாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.