வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்க வரும் 20ஆம் தேதி, பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு பயணம் செய்யவிருந்தார். ஆனால், தற்போது அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கான மறுதேதி பின்னர் தெரிவிக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு பயணம்: இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது.


இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழில்சாலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் தற்போது 100 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. 


தமிழ்நாட்டில் மட்டும் 6 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். 


அதன் அடிப்படையில், எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயிலை தினசரி ரயிலாக இயக்க ரயில் வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க வரும் 20ஆம் தேதி, பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு வரவிருந்தார்.


அதோடு, மதுரை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கவிருந்தார். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு மோடி வரவிருந்தார்.


தேர்தலில் பலன் அளிக்காமல் போன மோடியின் பிளான்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றியது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை சந்தித்தன.


தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி 8 முறை வந்திருந்தார். ஆனால், அவை எதுவும் பயன் அளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட சூழலில், மோடியின் தமிழக பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


இதையும் படிக்க: Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்